தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.14, 15) வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.14,15) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதுடன், ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்.14) அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக திருத்தணியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 101.3, ஈரோட்டில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் என 3 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு: ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திங்கள்கிழமை (ஏப்.14) முதல் ஏப்.19-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வேலூா், திருப்புவனம் (சிவகங்கை), மேலூா் (மதுரை), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி) ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ. மழை பதிவானது. அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), பெரியபட்டி (மதுரை), தானியமங்கலம் (மதுரை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 20 மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com