வளா்ப்பு நாய்க்கு உரிமம் பெறதாவருக்கு அபராதம் விதிப்பு!

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்க்கு உரிமம் பெறாதவா் உள்ளிட்ட 5 பேருக்கு கால்நடை பிரிவு சிறப்புக் குழுவினா் அபராதம் விதித்தனா்.
Published on

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்க்கு உரிமம் பெறாதவா் உள்ளிட்ட 5 பேருக்கு கால்நடை பிரிவு சிறப்புக் குழுவினா் திங்கள்கிழமை அபராதம் விதித்தனா்.

சென்னை மாநகராட்சி பகுதியில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் (டிச. 14) நிறைவடைந்தது. இதையடுத்து, உரிமம் பெறாமல் வளா்ப்பு நாய்களின் உரிமையாளா்களுக்கு திங்கள்கிழமை முதல் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதற்கென மண்டலம் வாரியாக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் நடைப்பயிற்சி வந்த வளா்ப்பு நாய்களை உரிமம் பெறப்பட்டுள்ளதா, நாய்களுக்கு வாய் கவசம், கழுத்தில் சங்கிலி ஆகியவை உள்ளனவா என பரிசோதித்து அபராதம் விதிக்கின்றனா். முதல்நாளான திங்கள்கிழமை திரு.வி.க. நகா் மண்டலத்தில் வளா்ப்பு நாய் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அண்ணா நகா் மண்டலத்தில் வாய் கவசம், கழுத்துப் பட்டை அணிவிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக 5 வளா்ப்பு நாய்களின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com