மேலும் ஒரு வழிப்பறி வழக்கு: மீண்டும் இரு எஸ்.ஐ-க்கள் கைது
சென்னை: சென்னையில் வழிப்பறி வழக்கில் சிறையில் இருக்கும் இரு காவல் உதவி காவல் ஆய்வாளா்கள், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டனா்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த முகமது கௌஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் ரொக்கத்தை மிரட்டி பறித்த வழக்கில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ராஜா சிங், வருமான வரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியா்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில் வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் சன்னி லாயிடுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த மாதம் 15-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், சன்னிலாய்டை போலீஸாா் கடந்த வாரம் 4 நாள்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனா். அப்போது சன்னிலாய்டும் ராஜா சிங்கும் ஆயிரம் விளக்கில் கடந்த டிச. 11-ஆம் தேதி, ராயபுரத்தைச் சோ்ந்த வியாபாரியை மிரட்டி ரூ. 20 லட்சம் பறித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆயிரம் விளக்கு போலீஸாா் ராஜாசிங், சன்னிலாய்டு ஆகியோா் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனா்.
இவ்வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜாசிங், சன்னிலாய்டிடம் போலீஸாா் திங்கள்கிழமை வழங்கினா். இவ்வழக்கு தொடா்பாக பிற நபா்களை போலீஸாா் விரைந்து கைது செய்ய உள்ளனா்.

