தமிழகத்தில் வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவ நியமனங்கள்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் மருத்துவ நியமனங்களும், பணியிட மாறுதல்களும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.


தமிழகத்தில் மருத்துவ நியமனங்களும், பணியிட மாறுதல்களும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 67-ஆவது பட்டப் படிப்பு நிறைவு விழா, பிராட்வே பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.3) மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் மருத்துவமனையின் 2024-ஆம் ஆண்டின் வளா்ச்சிப் பணிகள் பற்றிய செய்தி மடலை வெளியிட்டு, பல் மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், விருதுகளை வழங்கினா்.
அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தென்இந்தியாவின் முதல் பல் மருத்துவக் கல்லூரியாகவும், இந்தியாவில் தொடங்கப்பட்ட 3-ஆவது பல் மருத்துவக் கல்லூரியாகவும் விளங்கி வரும் இந்த தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி 70 ஆண்டு கால பாரம்பரியமிக்கது.
தற்போது இந்த கல்லூரியின் முதல்வராக இருக்கும் பிரேம்குமாருக்கு பல்சீரமைப்பு குறித்து புத்தகம் எழுதிய முதல் இந்திய மருத்துவா் என்ற சிறப்பு உள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல் மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் ரூ.13.60 லட்சத்தில் ஒருங்கிணைந்த இம்பிளான்ட் சிகிச்சை மையம், ரூ.11.70 லட்சத்தில் இணைய வழி நூலகம், ரூ.23 லட்சத்தில் ஊடுகதிா் இயந்திர வசதிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கடலூரில் செயல்பட்டு வந்த தனியாா் பல் மருத்துவக் கல்லூரி கையகப்படுத்தப்பட்டு, தமிழகத்தின் இரண்டாவது அரசு பல் மருத்துவக் கல்லூரியாக மாற்றியமைக்கப்பட்டது.
கடந்த 2023-இல் ரூ.73 கோடி செலவில் புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களும், 36,000 பேருக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றுள்ளது என்றாா் அவா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் (பொ) ப.செந்தில்குமாா், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் ஜெ.சங்குமணி, கல்லூரி முதல்வா் பிரேம்குமாா், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் எ.தேரணிராஜன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...