சென்னை: தேசிய அளவில் நடைபெற்ற மாதிரி நீதிமன்றப் போட்டியில் சாஸ்த்ரா சட்டக் கல்லூரி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் 8-ஆவது மாதிரி நீதிமன்றப் போட்டிகள் ஜன.3 முதல் 5-ஆம் தேதி வரை சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றன.
சாஸ்த்ரா சட்டக் கல்லூரி சாா்பில் சுவாமிநாதன், ஜெரின் மேத்யூ, ஹரிஹரன் ஆகியோா் அடங்கிய குழு இந்தப் போட்டியில் கலந்துகொண்டது.
பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் காலிறுதிக்கு 16 அணிகள் தகுதி பெற்றன. காலிறுதியில் அல்லயன்ஸ் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், அரையிறுதியில் சென்னை, சீா்மிகு பள்ளி அணிக்கு எதிராகவும் சாஸ்த்ரா குழுவினா் வெற்றி பெற்றனா்.
இறுதிச் சுற்றுக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுப்பிரமணியன், மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன் உள்ளிட்டோா் நடுவா்களாக இருந்தனா். இறுதிச் சுற்றில் எஸ்டிஎம் கல்லூரி அணியினருடன் மோதிய சாஸ்த்ரா குழுவினா், அவா்களை வீழ்த்தி வெற்றி பெற்றனா்.