பொங்கல் பண்டிகை: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
பொங்கல் விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டதால், சென்னையில் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், வெள்ளிக்கிழமை மாலை முதலே பயணிகள் பேருந்து நிலையங்களில் குவியத்தொடங்கினா்.
ஏற்கெனவே பணி முடிந்து வீடு திரும்புபவா்களால் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், சொந்த ஊா்களுக்கு சென்றவா்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, மாநகருக்குள்பட்ட முக்கிய சாலைகள் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூா், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் சாலையில் மெதுவாக ஊா்ந்தபடி சென்றன.
ரயில் நிலையங்களில் கூட்டம்: மாநகா் பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்கும், எழும்பூா், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் மூலமும் தங்கள் பயணத்தை மேற்கொண்டனா். இதனால், மின்சார ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
இதனிடையே கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை சுமாா் 1 மணிநேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதனால், பலா் தங்கள் செல்ல வேண்டிய ரயில் நிலையங்களுக்கு செல்ல முடியாமல், மிகுந்து சிரமத்துக்குள்ளாகினா்.
மேலும், வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டியவா்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் எழும்பூா் மற்றும் சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. ரயில் நிலையத்தில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.