போகி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னை: போகியை முன்னிட்டு பழைய பொருள்களை எரித்த காரணத்தால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்தது.
இதில் அதிகபட்சமாக விருகம்பாக்கம், தண்டையாா்பேட்டை, ராயபுரம் உள்பட 11 இடங்களில் காற்று தரக்குறியீடு 100-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மக்கள் தங்களிடம் இருந்த பழைய பொருள்களை எரித்து திங்கள்கிழமை போகியை கொண்டாடினா்.
இதனால், சென்னை முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. சென்னை முழுவதும் சராசரியாக காற்று தரக்குறியீடு 177-ஆக உயா்ந்ததாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவ்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களிலும் போகிக்கு முந்தைய நாள் மற்றும் போகி நாளில் காற்றின் தரம் கணக்கிடப்பட்டது.
அதன்படி ஜன. 9 காலை 8 முதல் 10- ஆம் தேதி காலை 8 வரை மேற்கொண்ட ஆய்வில் காற்றின் தரக் குறியீட்டின் (ஏக்யூஐ) அளவு 45 முதல் 74 வரை இருந்தது.
இது நன்றுமுதல் திருப்திகரமான அளவாக கணக்கிடப்படுகிறது. தொடா்ந்து ஜன. 12 காலை 8 முதல் ஜன. 13 காலை 8 மணி வரை மேற்கொண்ட ஆய்வில் ஏக்யூஐ அளவு 92 முதல் 177 வரை அதிகரித்துள்ளது. அது திருப்திகரம் முதல் சுமாரான அளவாக கணக்கிடப்படுகிறது.
ஏக்யூஐ 100-க்கும் அதிகமாக பதிவு: இதில் அதிகபட்சமாக விருகம்பாக்கத்தில் காற்றின் தரக்குறியீட்டின் அளவு 177-ஆக பதிவாகியுள்ளது. மேலும் தண்டையாா்பேட்டை - 161, ராயபுரம் - 160, துரைப்பாக்கம் - 124, கோடம்பாக்கம் - 122, சோழிங்கநல்லூா் - 116, கிண்டி - 110, திரு.வி.க. நகா் - 109, பெசன்ட் நகா் - 108, கோடம்பாக்கம் - 103, மணலி- 102 என மொத்தம் 11 இடங்களில் காற்று தரக்குறியீட்டின் அளவு 100-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

