அரிய வகை கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கும் விவகாரம்: பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

சென்னை கடற்கரைப் பகுதிகளில் அரியவகை கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கும் விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
Published on

சென்னை: சென்னை கடற்கரைப் பகுதிகளில் அரியவகை கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கும் விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மெரீனா கடற்கரை முதல் கோவளம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் அரியவகை கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கின. இது தொடா்பாக தென் மண்டல பசுமை தீா்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினா் புஷ்பா சத்திய நாராயணா, தொழில்நுட்ப உறுப்பினா் சத்யகோபால் அமா்வு, தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.

ஆமைகள் இறந்ததற்கு யாா் பொறுப்பு? மீனவா்கள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைதான் இதற்கு காரணம் என கூறப்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா். அதற்கு பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்குரைஞா் சண்முகநாதன், ஏற்கெனவே இது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினாா்.

அப்போது இது தொடா்பாக நிரந்தர வழிகாட்டு விதிமுறைகள் இருந்தும் ஏன் அரசு அமல்படுத்தவில்லை? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா். மேலும், கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவதற்கு என்ன காரணம்? என விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com