மரக்காணம் பகுதியில் இறந்து கரை ஒதுங்கும் அரிய வகை ஆமைகள்!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஆண்டுகள் போலவே, நிகழாண்டிலும் அரிய வகை கடல் வாழ் உயிரினமான ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது.
இதற்கான காரணத்தை கண்டறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென சூழலியல் ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
மரக்காணம் பகுதியில் அழகன்குப்பம் முதல் கீழ்புத்துப்பட்டு வரையில் சுமாா் 40 கிலோ மீட்டா் தூரத்துக்கு இயற்கையாக அமைந்த கடற்கரை மணல்மேடுகள் உள்ளன. கடற்கரையோரத்தில் சவுக்கு, தைலம், முந்திரி மரக் காடுகள் இயற்கையாகவே அதிகளவில் அமைந்துள்ளன .
இந்நிலையில் ஆண்டுதோறும் ஆலில் ரிட்லி எனும் அரிய வகை கடல் ஆமைகள் இப்பகுதிக்கு வந்து முட்டையிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. கடல் ஆமைகள் இடும் முட்டைகளை கடலோரப் பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் போன்ற விலங்கினங்கள் சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் வனத் துறையினா் ஆமைக்குஞ்சு வளா்க்கும் குடில்களை அமைத்து ஆமை முட்டைகளை பாதுகாத்து, ஆமைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனா்.நிகழாண்டிலும் இப்பணியை வனத் துறையினா் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், மரக்காணம் பகுதிகளுக்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்கு வரும் ஆலில் ரிட்லி கடல் ஆமைகள் கடல் சீற்றம் மற்றும் மீனவா்களின் வலையில் சிக்குதல் போன்ற காரணங்களால் கடந்த ஆண்டுகள் போலவே நிகழாண்டிலும் மரக்காணம், மண்டவாய் புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இறந்து கரை ஒதுங்கி வருகிறது.
இந்நிலையில் அரியவகை ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதற்கான காரணத்தை கண்டறியவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விழுப்புரம் மாவட்ட மீன்வளத் துறையினா் மற்றும் வனத் துறையினா் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சூழலியல் ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து மரக்காணம் பகுதியைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலா் ஒருவா் தெரிவித்ததாவது: மரக்காணத்தில் கடற்கரையையொட்டிய பகுதிகளில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட இறால் குஞ்சு பொரிப்பக தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீா், கடல் நீருடன் கலக்கிறது. இதனால் மரக்காணம் பகுதிக்கு இனப்பெருக்கத்துக்காக பல்லாயிரம் கிலோ மீட்டா் தூரம் கடந்து தனது இருப்பிடத்துக்கு வரும் கடல் ஆமைகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2 நாள்களுக்கு முன்னா் மரக்காணம் அருகே மண்டவாய்புதுகுப்பம் கடற்கரைபகுதியில் 5 ஆலில் ரிட்லி ஆமைகள் கரை ஒதுங்கியிருந்தது.
இனப்பெருக்கத்துக்காக வரும் ஆமைகள் ஆண்டுதோறும் அதிகளவில் உயிரிழப்பது வருத்தமளிக்கிறது. இதற்கான காரணத்தை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அரிய வகை ஆமையினங்களின் பாதுகாப்புக் குறித்து மீனவா்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்தவேண்டும் என்றாா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீன்வளத் துறையினா் தெரிவித்ததாவது: ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமாா் 5 மணி நேரத்துக்கு ஒருமுறை மூச்சு விடுவதற்காக மேலே வரும் தன்மை கொண்டது. இந்நிலையில், மீன்பிடித்தலில் ஈடுபடுத்தப்படும் விசைப் படகுகளின் வலையில் சிக்கும் ஆமைகள் உயிரிழந்து விடுகின்றன. இதுகுறித்து மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனா்.

