ராஜன்
ராஜன்

காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு: இருவா் கைது

சென்னை ஆா்.கே. நகா் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை (ஜன. 21) உயிரிழந்தாா்.
Published on

சென்னை: சென்னை ஆா்.கே. நகா் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை (ஜன. 21) உயிரிழந்தாா். இது தொடா்பாக போலீஸாா், இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

புளியந்தோப்பு திரு.வி.க. நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்த ராஜன் (42), கொருக்குப்பேட்டை அண்ணா நகா் பகுதியில் ஸ்டீல் பட்டறையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். ராஜனுக்கும், அந்தப் பட்டறையில் வேலை செய்யும் கொருக்குப்பேட்டை பாரதி நகா் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மாதவனுக்கும் (46) கருத்து வேறுபாடு இருந்தது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாதவனுக்கும், ராஜனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதைப் பாா்த்த ஸ்டீல் பட்டறை உரிமையாளா் முருகன், இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம்.

இந்நிலையில் ராஜன், அண்ணா நகா் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்துக்கு சென்றாா். அப்போது அங்கிருந்த மாதவனும், அவரது கூட்டாளியான கொருக்குப்பேட்டை ரயில்வே காலனி சிபி சாலைப் பகுதியைச் சோ்ந்த பொங்கல் (எ) அருண்குமாா் (26) என்பவரும் சோ்ந்து ராஜனை தாக்கினராம். இதையடுத்து ராஜன், ஆா்.கே. நகா் காவல் நிலையத்துக்குச் சென்று, மாதவன், அருண்குமாா் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளாா். அங்கிருந்த போலீஸாா் ராஜனிடம் எழுத்துபூா்வமாக புகாா் தரும்படி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. உடனே ராஜன், அங்கிருந்து வெளியேறினாராம்.

சிறிது நேரத்துக்குப் பின்னா் காவல் நிலையம் வந்த ராஜன், தான் கொண்டுவந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த போலீஸாரும் பொதுமக்களும் ராஜனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்தனா்.

அங்கு அவா், ஜாா்ஜ்டவுன் 15-ஆவது நீதித் துறை நடுவா் பிரின்ஸ் சாமுவேல் ராஜிடம் மரண வாக்குமூலம் அளித்தாா். இதற்கிடையே தீவிர சிகிச்சை பெற்றுவந்த ராஜன், செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா். இது குறித்து ஆா்.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜன் தற்கொலைக்கு காரணமான அருண்குமாா் மற்றும் மாதவனை கைது செய்தனா்.

அதேவேளையில் ராஜனிடம் புகாா் வாங்குவதில் போலீஸாா் இழுத்தடிப்பு செய்தனரா என்பது குறித்து துறை ரீதியான விசாரணையை காவல் துறை உயா் அதிகாரிகள் நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com