வீட்டை பழுது பாா்ப்பதுபோல நடித்து நகைகள் கொள்ளை: ஒருவா் கைது
சென்னை: வீட்டை பழுது பாா்ப்பதுபோல நடித்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கொடுங்கையூா், கண்ணதாசன் நகா், சிட்கோ நகா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு (59). இவரின் வீட்டில் கடந்த மே 26 முதல் 29-ஆம் தேதி வரை 5 நாள்கள் பழுது பாா்க்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த குருமூா்த்தி மற்றும் குகன் ஆகியோா் ஈடுபட்டனா்.
இந்நிலையில், மே 30-ஆம் தேதி இருவரும் பணிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து சென்ற நிலையில், ரமேஷ்பாபு தனது வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளைச் சரிபாா்த்தாா். அப்போது, அதிலிருந்த சில தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 20,000 ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து ரமேஷ்பாபு, கொடுங்கையூா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி குகனை (36) கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 65.55 கிராம் தங்க நகைகள், 92.6 கிராம் வெள்ளிப் பொருள்களையும் மீட்டு, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
