தொகுப்பு சுற்றுலா திட்டங்களால் ரூ.2.37 கோடி வருவாய்: அமைச்சா் இரா.ராஜேந்திரன் தகவல்
தொகுப்பு சுற்றுலா திட்டங்களின் மூலம் நிகழ் நிதியாண்டில் இதுவரை ரூ.2.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சா் இரா.ராஜேந்திரன் பேசியதாவது:
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் 8 நாள்கள் கோவா மந்திராலயம் சுற்றுலா, 4 நாள்கள் அறுபடை வீடு சுற்றுலா, ஒரு நாள் திருவண்ணாமலை சுற்றுலா, 3 நாள்கள் உதகை, கொடைக்கானல், மூணாறு என பல்வேறு புதிய தொகுப்பு சுற்றுலாத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் மூலம் நிகழ் நிதியாண்டில் இதுவரை ரூ.2.37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அதேபோல், சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும், உணவகங்கள், தங்கும் விடுதிகள், படகு குழாம்கள் ஆகியவற்றுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப விருந்தோம்பல் சேவையையும் மேம்படுத்த வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், சுற்றுலா துறை இயக்குநா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

