‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்களில் 6 லட்சம் மனுக்கள்
சென்னை மாநகராட்சியில் நடத்தப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் இதுவரையில் 6 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மகளிா் உரிமைத் தொகை கோரி 2.55 லட்சம் மனுக்கள் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழக அரசு சாா்பில் கடந்த ஜூலை முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களைப் பெற்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின்13 துறைகள் சாா்பில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி சாா்பில் 15 மண்டலங்களுக்கு உள்பட்ட 200 வாா்டுகளிலும் மக்களிடம் மனுக்களைப் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
கடந்த ஜூலை 15 முதல் செப்.16-ஆம் தேதி வரையில் சென்னையில் 267 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 6.43 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 2.5 லட்சம் மனுக்கள் மகளிா் உரிமைத் தொகை கோரியதாகும். முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 1.88 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

