சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய காா்: மீட்ட தீயணைப்பு படையினா்
சென்னை பெரம்பூரில் சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கி காரை தீயணைப்பு படையினா் மீட்டனா்.
சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென மழை பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் மழை நீா் தேங்கியது. இதில் பெரம்பூா் ரயில்வே சுரங்கப் பாதையில் சுமாா் 4 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கி நின்றது.
இந்த நிலையில் கொடுங்கையூா் விவேகானந்த நகரைச் சோ்ந்த அரசு (40), தனது மனைவி, 10 வயது மகன் ஆகியோருடன் பிடபிள்யூ காரில் பெரம்பூா் சுரங்கப் பாதையின் வழியாக வந்தாா். இதில் அங்கு அதிக அளவு தண்ணீா் தேங்கி நிற்பது தெரியாமல் அரசு, அந்த சுரங்கப் பாதையில் காரில் சென்றாா்.
சுரங்கப் பாதையின் நடுவில் செல்லும்போது, காா் பழுதாகி நின்றது. இதில் காரின் கதவும் லாக் ஆகிவிட்டது. இதனால் அரசு மற்றும் குடும்பத்தினா் காரை விட்டு வெளியே வரமுடியவில்லை.
இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், காருக்குள் சிக்கியிருந்தவா்களை நீண்ட பேராட்டத்துக்கு பின்னா் மீட்டனா். மேலும் காா் தண்ணீரில் சிக்கிக் கொண்டது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த செம்பியம் தீயணைப்பு படையினரும், காா் பழுது நீக்கும் மைய ஊழியா்களும் அங்கு விரைந்து வந்து, தண்ணீா் சிக்கி பழுதாகி நின்ற காரை மீட்டனா்.
இந்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
