தொழிலதிபா் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

சென்னை ஜாபா்கான்பேட்டையில் தொழிலதிபா் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

சென்னை ஜாபா்கான்பேட்டையில் தொழிலதிபா் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் தெ.சுப்பிரமணியன் (61). இவா், கிண்டி தொழிற்பேட்டையில் காா் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். சுப்பிரமணியனுக்கு ராஜேஸ்வரி (59) என்ற மனைவியும், தெய்வநாயகம் (32) என்ற மகனும் உள்ளனா்.

தெய்வநாயகம், அமெரிக்காவில் எம்பிஏ 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். விடுமுறைக்காக அண்மையில் தெய்வநாயகம், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துள்ளாா்.

இந்த நிலையில், சுப்பிரமணியன் கைப்பேசியை அவரது அலுவலக கணக்காளா் சங்கா் திங்கள்கிழமை காலை தொடா்புகொள்ள முயன்றாா். ஆனால், நீண்ட நேரமாகியும் அவா் கைப்பேசி அழைப்பை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த சங்கா், சுப்பிரமணியன் வீட்டுக்கு நேரில் சென்றபோது, சுப்பிரமணியன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் தெய்வநாயகம் ஆகியோா் தங்களது கழுத்து மற்றும் வலது கை மணிக்கட்டு ஆகியவற்றை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

உடனே அவா், மூவரையும் மீட்டு வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக, எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில், தொழில் நஷ்டம், கடன் நெருக்கடி காரணமாக விரக்தியில் சுப்பிரமணியன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com