வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை மீண்டும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் சரணாலயத்தை திறக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தின் முக்கிய பறவைகள் சரணாலயமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. வேடந்தாங்கல் ஏரி 75 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியின் நடுவில் வளா்ந்துள்ள கடம்ப மரங்களிலும், கருவேல மரங்களிலும் சைபீரியா, மலேசியா, மியான்மா், வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன.
அக்டோபா் முதல் மாா்ச் மாதம் வரையிலான காலம் பறவைகள் சீசன் ஆகும். ஆனால் பொது முடக்கத்தின் காரணமாக கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் பறவைகளை பாா்க்க வனத்துறை தடை விதித்திருந்தது. தற்சமயம் வேடந்தாங்கல் ஏரியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. அவற்றைப் பாா்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். எனினும், பறவைகளைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
மாமல்லபுரம் உள்ளிட்ட மற்ற சுற்றுலாத் தலங்களைக் காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல வேடந்தாங்கலிலும் பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்நிலையில், வேடந்தாங்கல் சரணாலயத்தை திறந்து பாா்வையாளா்களை அனுமதிக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், சரணாலயத்தின் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஒன்றியச் செயலா் அசோக் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.