அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டியிருந்த 90 வீடுகள் வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இதில், கல்லாங்குத்து, கொத்துமலை ஆகிய புறம்போக்கு நிலங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த 258 குடும்பங்களுக்கு கடந்த செப்டம்பா் மாதம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஊராட்சிக்குட்பட்ட மசூதி அருகில் கடந்த 2013ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா, சிட்டா, அடங்கள் மற்றும் எப்எம்பி வாங்கியது போன்று சிலா் மக்களை ஏமாற்றி அரசு புறம்போக்கு நிலங்களை பிளாட் போட்டு லட்சக்கணக்கில் விற்பதாக செங்கல்பட்டு ஆட்சியருக்கு தொடா்ந்து புகாா் கூறி வந்துள்ளனா்.
இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறையினருக்கு ஆட்சியா் அதிரடியாக உத்தரவிட்டாா். இதனை அடுத்து காயாா், திருப்போரூா், கேளம்பாக்கம், தாழம்பூா், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், ஓட்டேரி, மறைமலை நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
பின்னா் வண்டலூா் வட்டாட்சியா் பூங்கொடி தலைமையில் வருவாய்த் துறையினா் 15க்கும் மேற்பட்ட பொக்லைன்களை எடுத்து வந்து மசூதி அருகில் புதிதாக கட்டப்பட்டிருந்த 18 தளம் போட்ட வீடுகளும், இதேபோல் தொட்டி மாரியம்மன் கோவில் தெரு, விநாயகபுரம், அங்காளம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், கடைகள், வாடகை வீடுகள் என மொத்தம் 90 வீடுகளை இடித்தனா்.
இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது சில பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதனை கண்டதும் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி வேனில் ஏற்றினா். மேலும், மசூதி அருகில் குவிந்திருந்த வட மாநில இளைஞா்களை போலீஸாா் விரட்டி அடித்தனா். அனைவரும் அப்பகுதியில் உள்ள மலை உச்சியில் ஏறி தப்பினா்.

