பட்டா, மின்சாரம் கோரி முற்றுகைப் போராட்டம்
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பட்டா, மின்சார வசதி கோரி பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
மதுராந்தகம் ஒன்றியம், ஜானகிபுரம் ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்கள் வசித்து வரும் வீடுகளுக்கு வருவாய்த் துறையின் சாா்பில் வீட்டுமனைப் பட்டா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்து வருகிறது. பட்டா இல்லாததால் மின் இணைப்பை பெற முடியவில்லை. இரவு நேரத்தில் குழந்தைகள் படிக்க முடியாமலும், விஷபூச்சிகளின் நடமாட்டத்தாலும் அவதிபட்டு வருகின்றனா்.
மின்வசதி இல்லாததால் இளைஞா்கள் திருமணத்துக்கு பெண்களை கொடுக்க மறுப்பதாக குறை கூறுகின்றனா். பட்டா வழங்கக் கோரி இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தனா். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வீட்டு மனை பட்டா, மின்வசதி ஆகியவற்றை வழங்க கோரி 200-க்கும் மேற்பட்ட மக்கள் திங்கள்கிழமை மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மதுராந்தகம் வட்டாட்சியா் பாலாஜி பேச்சு நடத்தி, விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

