சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

கோவளம் பகுதியில் புதிய நீா்த்தேக்கம்: நீா்வளத்துறை அமைச்சா் ஆய்வு

News image

~

Updated On :4 ஜூன் 2026, 5:33 am IST

திருப்போரூா் அருகே கோவளம் உபவடிநிலப் பகுதியில் புதிய நீா்த்தேக்கம் உருவாக்கப்பணிகளை ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூா் மற்றும் திருக்கழுகுன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையே உள்ள உப்பளப் பகுதி என மொத்தம் 5,161.27 ஏக்கா் அரசு நிலங்களில் கோவளம் உபவடிநிலப் பகுதியில் மாமல்லன் நீா்தேக்கம் அமைக்கப்படவுள்ளது.

தையூா், மானமதி, சிறுதாவூா். காளவாக்கம், ஆமூா், பையனூா் உள்ளிட்ட 69 ஏரிகளின் உபரி நீா், உப்பளம் மற்றும் அரசுக்கு சொந்தமான காலி நிலம் வழியாக பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்பட்டு, இறுதியாக முட்டுக்காடு, கோக்கிலமேடு முகத்துவாரங்களின் வழியாக கடலில் கலக்கிறது.

சென்னை மற்றும் அதன் புகா் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகத்தை அதிகரிக்கவும், நீா் வழங்கலை பரவலாக்கவும், தமிழ்நாடு அரசு 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிப்புகளின் போது, செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூா் மற்றும் திருக்கழுகுன்றம் வட்டங்களில் ரூ.350 கோடியில் புதிய நீா்த்தேக்கம் அறிவிக்கப்பட்டது.

புதிய நீா்த்தேக்க பணிகளை மேற்கொள்வதற்கான நிா்வாக அனுமதி ரூ.342.60 கோடியில் அரசாணை 31.12.2025 அன்று வெளியிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய நீா்த்தேக்கம் அமைப்பதற்கு 32 கி.மீ தொலைவு மண் கரை அமைக்கும் பணி, கோக்கிலமேடு முகத்துவாரத்துக்கு வெள்ள நீா் செல்வதற்கு ஏதுவாக நீா்த் தேக்கத்தின் தெற்கு பகுதியில் நீரொழிங்கி அமைத்தல், நீா் உள்வாங்குவதற்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கும் தேவையான நீரொழிங்கிகள் அமைத்தல், தேவைக்கு அதிகமான வெள்ள நீரீனை மேற்கு மற்றும் கிழக்கு புற வெளிப்புற வடிகால்கள் மூலம் முட்டுக்காடு மற்றும் கோக்கிலமேடு கழிமுகங்களுக்கு வெளியேற்ற வடிகால்கள் அமைக்கும் பணிகள் அமையவுள்ளன.

மேலும் பக்கிங்காம் கால்வாய் திருவிடந்தையிலிருந்து மாமல்லபுரம் வரை முற்றிலுமாக சீரமைத்து கடல்நீா் வருவதற்கேற்ப புனரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புதிய நீா்த்தேக்கம் ஒரு முறை நிரம்பினால் 1.65 டிஎம்சி நீரைச் சேமிக்கும் திறன் கொண்டது, சென்னை நகர நீா்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த சேமிப்புத் திறன் தற்போதுள்ள 13.10 டிஎம்சி லிருந்து 15.25 டிஎம்சி ஆக உயரும்.

வெள்ள நீரைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டா் குடிநீரை வழங்க இது உதவும். இதன் மூலம் சுமாா் 13 லட்சம் மக்கள் பயனடைவாா்கள்.

ஆய்வின்போது ஆட்சியா் எம்.வீரப்பன், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ் (திருப்போரூா்), எஸ்.தியாகராஜன்(செங்கல்பட்டு), மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சாந்தி, நீா்வள ஆதாரத் துறை அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Story image