வட சென்னையை வளமாக்கப்போவது யார்?
திருவொற்றியூர், மே 8: வடசென்னையில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச் சூழல் சீர்கேடு, கடலரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் தொடர்ந்து தீர்க்கப்படாமல் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இ


திருவொற்றியூர், மே 8: வடசென்னையில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச் சூழல் சீர்கேடு, கடலரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் தொடர்ந்து தீர்க்கப்படாமல் உள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இவற்றை தீர்க்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மனதில் எழுந்துள்ளது.
துறைமுக இணைப்புச் சாலை திட்டம்: சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னையின் முக்கிய சாலைகளில் துறைமுகத்திற்கு செல்லும் லாரிகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் தற்போது துறைமுகத்திற்கு வரும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் மாதவரம், திருவொற்றியூர், காசிமேடு வழியாகவே துறைமுகம் சென்றடைகின்றன. துறைமுக சரக்குப் போக்குவரத்து பன்மடங்காக (கடந்த ஆண்டு 5.72 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டன) பெருகி உள்ள நிலையில் சாலைகள் விரிவு படுத்தப்படவில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.329 கோடி மதிப்பீட்டில் சென்னை- எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டத்திற்கு 2005 ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
செப்டம்பர் 2007-ல் நிறைவடைய வேண்டிய இத்திட்டம் மதிப்பீடு ரூ.636 கோடியாக அதிகரித்து இன்றுவரை கிடப்பில் உள்ளது.
காணாமல் போன அரோமேடிக் தொழிற்சாலை: 1990-ல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மணலியில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் அரோமேடிக் தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கென ஆமுல்லைவாயல், வைக்காடு உள்ளிட்ட கிராமங்கள் முழுவதுமாக சுமார் 1,800 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. வி.பி.சிங்-கும் பதவி இழந்தார். திட்டமும் திசைமாறிச் சென்றது. சுமார் 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அரோமேடிக் தொழிற்சாலையும் வரவில்லை. உரிய நிவாரணமும் கிடைக்காமல் இன்றுவரை மக்கள் போராடி வருகின்றனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அரோமேடிக் ஆலை தரும் என்பதால் ஒரு சென்ட் நிலத்தை அன்று ரூ.4 ஆயிரத்திற்கு விவசாயிகள் கொடுத்தனர்.
ஆலை வராததால் இந்நிலங்களின் ஒரு பகுதியை ஐ.ஓ.சி, ஸ்பிக், பேயர், நாட்கோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாரை வார்த்தனர். இன்று சென்ட் நிலம் ஒரு லட்சத்திற்கு தனியாருக்கு விற்கப்படுகிறது. ஆனாலும் போதிய நிவாரணம் இன்றி மூன்று கிராம மக்கள் போராடி வருகின்றனர். விவசாய நிலங்களை இழந்து தற்போது காலம் காலமாக வசித்து வந்த வீடுகளையும் காலி செய்ய வேண்டிய நிலையில் இவர்கள் வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே ஓட்டளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
கொடுங்கையூர் குப்பை வளாகம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் மகாகவி பாரதியார் நகர் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாதவரம், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சி அடைந்தன. அண்ணாநகர், கலைஞர் கருணாநிதி நகர் உள்ளிட்டவற்றுக்கு இணையாக வளர்ந்திருக்க வேண்டிய இப்பகுதி சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இங்கு வந்து சேர்ந்த மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகம்தான்.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் சீர்படுத்தப்படும், குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என மாநகராட்சி நிதிநிலை அறிக்கைகளில் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டாலும் நிலைமை மோசமடைந்தே வருகிறது. பராமரிப்பின்றி செல்லும் குப்பை லாரிகளால் எழும் துர்நாற்றம் இப்பகுதி மக்களை மூச்சடைக்க வைக்கிறது.
மராமத்துக்கு ஏங்கும் மாத்தூர் ஏரி
மணலி நகரை ஒட்டி அமைந்துள்ளது மாத்தூர் ஏரி. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் ஆக்கிரமிப்பிற்கும் உள்ளாகிவிட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தினால் மணலி மட்டுமல்ல வடசென்னைக்கே இந்த ஏரி வாழ்வளிக்கும். புழல் ஏரியின் உபரி நீர் இங்கு கொண்டு வரப்பட்டாலே மிகப்பெரிய ஏரியாக மாத்தூர் ஏரியை மாற்றிட முடியும்.
மேலும் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கில் இருந்து விடுதலை கிடைக்கும். அரியவகை பறவை இனங்கள் வந்து தங்கிச் செல்லும். இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தும்படி மக்கள் கோரிக்கை விடுக்காத மாவட்ட ஆட்சியர்களே இல்லை. இது வரை அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இவை தவிர திருவொற்றியூரில் ரயில்வே மேம்பாலம், வியாசர்பாடி மேம்பாலம், கடலரிப்பு பிரச்னை, மீனவர்கள் பிரச்னை போன்றவை குறித்தும் வேட்பாளர்கள் கவனம் செலுத்துவார்களா என்பதுதான் வாக்காளர்களின் தற்போதைய கேள்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...