100 நாள்களாக தூங்கும் நிவாரணப் பொருள்கள்
திருவொற்றியூர், அக். 16: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட நிவாரண பொருள்கள் கொழும்பு துறைமுகத்தில் நூறு நாள்களைக் கடந்தும் விநியோகம் செய்யப்படாமல் முட


திருவொற்றியூர், அக். 16: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட நிவாரண பொருள்கள் கொழும்பு துறைமுகத்தில் நூறு நாள்களைக் கடந்தும் விநியோகம் செய்யப்படாமல் முடங்கி கிடக்கின்றன.
இலங்கை சென்று திரும்பிய தமிழக எம்.பி.க்கள் இப்பிரச்னை குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வணங்காமண் கப்பல் பயணம்: இலங்கையில் ஏப்ரல், மே மாதங்களில் ராணுவத்தினருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த போர் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து பரிதவித்தனர். இவர்களுக்கு உதவும் நோக்கில் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் லண்டனில் உள்ள 'மெர்சி மிஷன்' என்ற தொண்டு நிறுவனம் மூலம் குழந்தைகள் உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்டவைகள் அடங்கிய ரூ. 3 கோடி மதிப்புள்ள 884 டன் பொருள்களை 'கேப்டன் அலி' என்ற கப்பலில் இலங்கைக்கு அனுப்பினர்.
இக்கப்பலின் பயணத்துக்கு 'வணங்காமண்' என பெயரிடப்பட்டது.
திசை மாறிய பயணம்: மே 7-ல் லண்டனில் தனது பயணத்தை துவக்கிய இக்கப்பல், ஜூன்-4-ல் இலங்கை கடல் எல்லையை அடைந்தது. அப்போது கப்பலை கைப்பற்றிய இலங்கை ராணுவம் நீண்ட விசாரணைக்குப் பிறகு அந்நாட்டிற்குள் நுழைய தடை விதித்து விரட்டியடித்தது. பின்னர் இக்கப்பல் சென்னை வந்தது. பல்வேறு முட்டுக்கட்டைகளைத் தாண்டி சென்னைத் துறைமுகத்தில் நுழைய அனுமதி கிடைத்தது. 'வணங்காமண்' கப்பலை இலங்கை ஏற்காததை அடுத்து நிவாரண பொருள்கள் இறக்கப்பட்டு 27 கண்டெய்னர்களில் மீண்டும் அடைக்கப்பட்டது.
பின்னர் ஜூலை-6 அன்று 'கேப் கொலரடோ' என்ற கப்பல் மூலம் நிவாரண பொருள்கள் கொழும்பு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த கப்பலையும் இலங்கைக்குள் அனுமதிக்க அந்நாட்டு ராணுவம் மறுத்தது. பின்னர் இது குறித்து சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிவாரண பொருள்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டன.
ரூ.32 லட்சம் கேட்டு கடிதம்: கப்பலின் திசை மாறிய பயணத்தால் ரூ. 2 கோடி வரை கூடுதலாக செலவிடப்பட்ட நிலையில் கொழும்பிலிருந்து வவுனியா வரை கொண்டு சென்று விநியோகம் செய்ய ரூ.32 லட்சம் செலவாகும் எனவும் இதை செலுத்தினால் மட்டுமே பொருள்களை வெளியே எடுக்க முடியும் என இலங்கை செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தியதை அடுத்து இப்பிரச்னை மீண்டும் சிக்கலாகியது. இக்கட்டணத்தை கட்டவில்லை எனில் நிவாரண பொருள்கள் ஏலத்தில் விடப்படும் நிலை ஏற்பட்டதால் இத்தொகையினை இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலம் மெர்சி மிஷன் செலுத்தியது. ஆனால் இதன் பின்னரும் பொருள்கள் குறித்து ஆய்வு செய்கிறோம் என்று கூறி இலங்கை காலதாமதம் செய்தது.
ஆனால் இன்று வரை நிவாரண பொருள்கள் அனைத்தும் கொழும்பு துறைமுகத்தில்தான் முடங்கியுள்ளன.
இது குறித்து 'வணங்காமண்' பயணத்தில் தொடர்பாளராக பணியாற்றும் 'மனிதம்' அமைப்பின் இயக்குநர் அக்னி சுப்பிரமணி கூறியது:
நிவாரண பொருள்களை விநியோகம் செய்ய பன்னாட்டு விதிமுறைகள் உள்ளன. இதன்படிதான் இவை அனுப்பப்பட்டன. ஆனால் இவ்விஷயத்தில் அனைத்து விதிகளையும் இலங்கை உதாசீனப்படுத்துகிறது. கொழும்பு துறைமுகத்தில் நூறு நாள்களைக் கடந்து பொருள்கள் முடங்கியது குறித்து இந்திய அரசோ தமிழக அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வியப்பைத் தருகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சென்ற எம்.பி.க்கள் சிலரிடம் முறையிட்டோம். ஆனால் எவ்வித பலனும் இல்லை. இது குறித்து எம்.பி.க்கள் தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் வியாழக்கிழமை வரை தெரிவிக்கப்படவில்லை என்றார் சுப்பிரமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...