/

சுகாதார சீர்கேட்டில் தொற்றுநோய் மருத்துவமனை

தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யப்படாமல் குப்பைகளுடன் காட்சிய ளிக்கும், பெண்கள் வார்டு பின்புற பகுதி. சென்னை, மார்ச் 14: மற்ற மருத்துவமனைகளைக் காட்டி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:27 pm
தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யப்படாமல் குப்பைகளுடன் காட்சிய ளிக்கும், பெண்கள் வார்டு பின்புற பகுதி.

சென்னை, மார்ச் 14: மற்ற மருத்துவமனைகளைக் காட்டிலும் கூடுதல் சுகாதாரத்துடன் பராமரிக்கப்பட வேண்டிய மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனை, மோசமான நிலையில் காட்சியளிக்கிறது.

விடுமுறை நாள்களில் சுகாதாரத்துக்கும் விடுமுறை அளித்து விடுகின்றனர் என்று புகார் தெரிவிக்கின்றனர் நோயாளிகளின் உறவினர்கள்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ளது மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனை. இங்கு அம்மை, சின்னம்மை, தட்டம்மை, காய்ச்சல், வாந்தி}பேதி உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவமனைக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருவதால், பழையக் கட்டடத்தில் 3 வார்டுகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த 3 வார்டுகளும் வேலை நாள்களில் ஓரளவு சுகாதாரத்துடன் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், விடுமுறை நாள்களில் சுகாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது.

மருத்துவமனையின் பெண்கள் வார்டுக்குப் பின்புறம் எப்போதுமே சுகாதாரமற்று காணப்படுகிறது. பெண்கள் கழிவறைக்கு அருகில் உள்ள கை கழுவும் இடத்தில் குழாய் உடைந்து தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருப்பதால், அந்தப் பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

பல நாள்களாக இந்தப் பகுதி இதே நிலையில்தான் உள்ளது என்று அங்கிருப்பவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு குழந்தையின் உறவினர் சத்யா கூறியது:

கடந்த வெள்ளிக்கிழமை வரை காலை, மாலை இரண்டு வேளைகளிலும் வார்டுகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டனர். ஆனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தண்ணீர் ஊற்றி கழுவுவது கிடையாது. குப்பைகளை மட்டும் அகற்றுகின்றனர்.

நோயாளிகளின் படுக்கைகளில் போடப்படும் விரிப்புகள் மாற்றப்படுவதே இல்லை. குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தபோது, படுக்கையில் புதிய விரிப்பு போடப்பட்டது. இப்போது 5 நாள்களாகியும் விரிப்பு மாற்றப்படவே இல்லை என்றார்.

விரிப்புகள் பற்றாக்குறை: மருத்துவமனையில் விரிப்புகள் பற்றாக்குறை காரணமாக, நோயாளிகளுடன் இருக்கவேண்டிய உறவினர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க வந்த பெண்ணை, வீட்டிலிருந்து படுக்கை விரிப்பை எடுத்துவருமாறு கூறி மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் தனது குழந்தையை மருத்துவமனையில் தனியாக விட்டுவிட்டு, தங்கசாலையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று பெட்ஷீட் எடுத்துவந்துள்ளார் ஒரு பெண்மணி.

இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அதிகாரி கூறியது:

மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படுவதால், பழைய கட்டடத்தில் 3 வார்டுகள் மட்டும்தான் செயல்பட்டு வருகின்றன. படுக்கை விரிப்பு பற்றாக்குறை உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் உள்ளன. புதிய கட்டடம் கட்டி முடித்தவுடன், இரண்டு மூன்று மாதங்களில் குறைபாடுகள் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.