தீயணைப்புத் துறை அனுமதியின்றி 40 மருத்துவமனைகள்!

சென்னை,டிச.10: தீயணைப்புத்துறையின் தடையில்லாச் சான்றிதழ் இல்லாமல் 40 தனியார் மருத்துவமனைகள் சென்னையில் செயல்படுவதாக அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.  கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்ப
Updated on
2 min read

சென்னை,டிச.10: தீயணைப்புத்துறையின் தடையில்லாச் சான்றிதழ் இல்லாமல் 40 தனியார் மருத்துவமனைகள் சென்னையில் செயல்படுவதாக அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 89 பேர் இறந்தது அனைத்து தரப்பு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த விபத்துக்குப் பின்னராவது, மருத்துவமனைகளில் தீ விபத்து உள்ளிட்ட அழிவில் இருந்து மனித உயிர்களைப் பாதுகாப்பது குறித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

 சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்தனர். இந்த விபத்துக்கு ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவே காரணமாகக் கூறப்பட்டது. அண்மைக்காலமாக 70 சதவீத தீ விபத்துகள் மின்கசிவினாலேயே ஏற்படுகின்றன. இந்த விபத்துக்குப் பின்னர், தீயணைப்புத்துறை தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது.

 அரசு மருத்துவமனைகளின் அவலம்: அரசு மருத்துவமனைகளில் 80 சதவீதம் தீ விபத்து போன்றவை ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் இல்லை; 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மருத்துவமனைகளில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவிக்கின்றனர். சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை. இந்த மருத்துவமனைகளில் இருக்கும் மின் வயர்களையும், மின் சாதனங்களையும் மாற்றினாலே ஓரளவுக்குப் பாதுகாப்பான நிலையை எட்ட முடியும் என்கின்றனர்.

 தடையில்லாச் சான்றிதழ் இல்லை: சென்னையில் பல மாடி கொண்ட மருத்துவமனைகள் சுமார் 50 உள்ளன. இவற்றில் தீயை அணைக்க நீர்த்தெளிப்பான், நீர்த்தொட்டி, தீயணைப்புக் கருவிகள் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பதாக அத்துறையினர் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் தீ விபத்து உள்ளிட்ட விபத்துகள் ஏற்பட்டால் நோயாளிகள் எளிதில் தப்பிச் செல்வதற்காக வெளியேறும் வழிகள், சாய்வு தளங்கள் ஆகியவை பெரும்பான்மையான மருத்துவமனைகளில் இல்லை.

 15 மீட்டர் உயரத்துக்கு மேல் இருக்கும் பல மாடிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் தீயணைப்புத்துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை வாங்க வேண்டிய இந்தச் சான்றிதழை சென்னையில் 10-க்கும் குறைவான மருத்துவமனைகளே இந்தாண்டு வாங்கியிருப்பதாக தீயணைப்புத்துறை உயர் அதிகாரி தெரிவிக்கிறார். போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியும் செயல்பட்ட 10 மருத்துவமனைகளின் விண்ணப்பங்களைத் தீயணைப்புத்துறை நிராகரித்துள்ளதாம். இதன் காரணமாக 50 பெரிய மருத்துவமனைகளில் 40 மருத்துவமனைகள் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 இவ்வாறு செயல்படும் மருத்துவமனைகள் மீது தீயணைப்புத்துறை நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் வழிவகை இல்லை எனவும் அவர் கூறுகிறார். இந்த மருத்துவமனைகள் மீது மாநகராட்சியும்,சி.எம்.டி.ஏ.வும், சுகாதாரத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.

 10 நிமிஷத்தில் வர வேண்டும்

 சென்னை போன்ற பெருநகரங்களில் 2.5 கிலோ மீட்டருக்கு ஒரு தீயணைப்பு நிலையம் இருக்க வேண்டும், நகரின் எந்தப் பகுதியில் விபத்து நடைபெற்றாலும், அந்த இடத்தை 10 நிமிஷத்தில் தீயணைப்புப் படை வீரர்கள் சென்றடையும் வகையில் தீயணைப்பு நிலையங்கள் இருக்க வேண்டும் என்கிறது சட்டம்.

 விபத்து நடந்த இடத்தை அடைய தீயணைப்பு வாகனங்கள் 1 நிமிஷத்துக்கு ஒரு கிலோ மீட்டர் என்ற வேகத்தில் கடக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் காரணமாக சம்பவ இடத்தை அடைய சில வேளைகளில் தாமதம் ஏற்படுவதாக அத்துறையினர் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்த இடத்தை உடனடியாக அறிய அனைத்து தீயணைப்பு வாகனங்களிலும்ó ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டிருக்கின்றன.

 விதி மீறல்களின் உச்சம்

 கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, தரை தளத்தில் இருந்த எலக்ட்ரிக்கல் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் தரை தளத்தில் ஹோட்டல், மருந்துக் கடை, கிட்டங்கி என தீ விபத்தை எளிதில் ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கின்றனவாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com