மக்கள் குறைதீர் மன்றங்களை அரசுடன் இணைந்து நடத்த வேண்டும்

நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்கள் குறைதீர் மன்றங்களை அரசுடன் இணைந்து நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சதாசிவம் கூறினார்.
மக்கள் குறைதீர் மன்றங்களை அரசுடன் இணைந்து நடத்த வேண்டும்
Updated on
1 min read

நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்கள் குறைதீர் மன்றங்களை அரசுடன் இணைந்து நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சதாசிவம் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சட்ட உதவி மையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட 2-ம் தளம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதைத் திறந்து வைத்து நீதிபதி பி. சதாசிவம் பேசியது:

அண்மையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒரு மிகப் பெரிய மக்கள் குறைதீர் மன்றத்தில், ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

இது எப்படி சாத்தியம் என்று விசாரித்தபோது, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அம்மாநில அரசுடன் இணைந்து இந்த குறைதீர் மன்றத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது. இதுபோல் சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசுடன் இணைந்து மிகப் பெரிய மக்கள் குறைதீர் மன்றம் நடத்தி, நீதிமன்ற வழக்குகள் மட்டுமின்றி, குடிநீர் வாரியம், மின்சாரம், சொத்து வரி, குடும்ப அட்டை என்பன உள்ளிட்ட அரசுத் துறைகளில் நிலுவையில் இருக்கும் பல லட்சம் வழக்குகளுக்கும் விரைவில் தீர்வு காண வேண்டும்.

அவ்வாறு மிகப் பெரிய மக்கள் குறைதீர் மன்றங்கள் நடத்தும்போது காவல்துறை, வருவாய், வனம், தொழிலாளர் துறை, கூட்டுறவு, மின் வாரியம், நகராட்சி அதிகாரிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவன உயர் அதிகாரிகள், வழக்குரைஞர்கள் கவுன்சில் உறுப்பினர்கள் ஆகியோருடன் சட்டப் பணிகள் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும் என்றார் அவர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மராவ்: சட்டப் பணிகள் ஆணையத்தை மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்திக்கொண்டால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டும் அல்லாமல், தகுதியுடைய அனைத்துப் பிரிவினருக்கும் விரைந்து நீதி கிடைப்பதை உறுதி செய்துவிட முடியம் என்றார்.

சட்ட உதவி மையத்தில் ரூ. 1.8 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த 2-ம் தளம் திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி. நாகப்பன், சித்ரா வெங்கட்ராமன், வி. தனபாலன் உள்பட அனைத்து நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com