/

சிறப்பு பஸ்களை ரத்து செய்ய அரசு போக்குவரத்துக் கழகங்கள் திட்டம்

டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பஸ் சேவைகளை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Updated On :23 ஜனவரி 2013, 11:00 pm

டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பஸ் சேவைகளை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால், அப்பகுதிகளுக்கு வழக்கமான பஸ் சேவையோடு, தினமும் சிறப்பு பஸ்களையும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் இயக்கி வருகின்றன. டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நிலைமையைச் சமாளிக்க இந்த சிறப்புச் சேவைகளை ரத்து செய்ய போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சில ஏற்கெனவே இந்த ரத்து நடவடிக்கையை தொடங்கிவிட்டன.

2012 செப்டம்பரில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 6 என்ற அளவுக்கு மத்திய அரசு உயர்த்திய நிலையில், இப்போது மீண்டும் அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே உள்ளிட்ட மொத்த கொள்முதல் டீசலுக்கான விலையை லிட்டருக்கு ரூ. 11.80 என்ற அளவுக்கு மீண்டும் உயர்த்தியுள்ளது.

இது, ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிவரும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 14 லட்சமும், மாதம் ரூ. 4.2 கோடி அளவுக்கும் கூடுதல் செலவாகும். இதனால், வரும் வருமானத்தில் ஊழியர்களுக்கு ஊதியத்தைக் கொடுக்கலாம் அல்லது டீசலுக்கான தொகையை செலுத்தலாம். இரண்டுக்கும் செலவழிக்க முடியாது. மேலும் பஸ் பராமரிப்புச் செலவுக்கு தனி தொகை வேண்டும். தமிழகத்தில் உள்ள பிற அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் இதே நிலைதான்.

எனவே, நிலைமையை சமாளிக்க, வழக்கமான பஸ் சேவையைக் குறைப்பது சாத்தியமாகாது என்றபோதும், சிறப்பு பஸ் சேவைகளை ரத்து செய்ய போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பண்டிகை காலங்கள் மட்டுமல்லாமல், சாதாரண நாள்களிலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 70 சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. இந்த சிறப்பு பஸ் சேவையை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இயக்கிவிட்டு, அதன் பிறகு முழுவதும் ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிற போக்குவரத்துக் கழகங்களும் இதுபோல் திட்டமிட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.