ரயில் உதிரி பாகங்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால் ரயில்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று தெற்கு ரயில்வே பணிமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதிரிப் பாகங்கள் நல்ல தரத்துடன் இல்லை என்பதோடு தேவையான அளவும் வழங்கப்படுவதில்லை என்பதால் பணிமனைகளில் ரயில் பராமரிப்புப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், உதிரிப் பாகங்கள் பற்றாக்குறை காரணமாக ஒரு ரயில் வண்டியில் உள்ள பாகங்களைக் கழற்றி இன்னொரு வண்டியில் பொருத்தும் அவல நிலை உருவாகியுள்ளது.
பராமரிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதன் காரணமாக இன்னும் சில மாதங்களில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு முடங்கிப்போகும் அபாயம் உள்ளது என தெற்கு ரயில்வே தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்கள் பற்றாக்குறை: பெரிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் முனையங்களில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வளாகங்கள் உள்ளன. ஆனால், தொழில்நுட்பப் பணியாளர்கள் முதல் துப்புரவுத் தொழிலாளர்கள் வரை பெரும்பாலான பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
ஏற்கெனவே, ரயில் பெட்டிகளுக்குத் தட்டுப்பாடு உள்ள நிலையில், பயணிகள் நெரிசல் காரணமாக அதிக ரயில்களை இயக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் முறையான பராமரிப்பு இல்லாமல், ஓய்வில்லாத தொடர் பயணமாக இயக்கப்படுகின்றன.
தனியாரிடம் பராமரிப்புப் பணி: தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னையைக் காரணமாகக் கூறி, இப்போது ரயில் பெட்டிகளைப் பராமரிக்கும் பணி ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ரயில் பெட்டிகள் பராமரிப்புக்காக மட்டும் ரூ. 20 கோடியை தெற்கு ரயில்வே ஒதுக்கியுள்ளது. ரயில் பெட்டிகளின் பராமரிப்பை தனியாருக்கு வழங்குவதால் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந் நிலையில், சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்குத் தினமும் இயக்கப்படும் முக்கிய ரயில்களின் தூங்கும் வசதியுள்ள 2-ஆம் வகுப்பு பெட்டிகளில் எலி, கரப்பான் பூச்சிகளின் தொல்லை காரணமாக பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.
சென்னை எழும்பூர்- தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில், சென்னை- செங்கோட்டை பொதிகை விரைவு ரயில், சென்னை- திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு இரவு நேர ரயில்களில் 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் பெட்டிகள் வட இந்திய மாநிலங்களில் பல ஆண்டு இடைவிடாத சேவைக்குப் பின் தெற்கு ரயில்வே மண்டலத்துக்குத் தள்ளப்படும் அவலமும் உள்ளது.
அசுத்த ரயில்கள்: சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூட்டம் எப்போதும் அதிகமிருக்கும். மிகவும் பழைய ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்களில் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதோடு கடும் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. இதனால், பயணிகளுக்கு ரயில் பயணம் தண்டனையாக மாறும் சூழல் உள்ளது. பயணிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக தெற்கு ரயில்வே பராமரிப்பு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தங்கம் விலை ரூ. 800 உயர்வு: வெள்ளி?
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

