/

ஆட்டோக்களால் ஏற்படும் இடையூறுகள்: சிற்றுந்துகள் மூலம் தீர்வு காணத் திட்டம்

ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும் இடையூறுகளுக்கு, சிற்றுந்துகள் மூலம் தீர்வு காண மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டு வருகிறது.

News image
Updated On :11 மார்ச் 2015, 11:48 pm

ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும் இடையூறுகளுக்கு, சிற்றுந்துகள் மூலம் தீர்வு காண மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டு வருகிறது.

இதற்காக, மாநகரில் மேலும் எந்தெந்த இடங்களில் சிற்றுந்துகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது குறித்த ஆய்வை போக்குவரத்துக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகரில் சாதாரண ஆட்டோக்கள் மட்டுமின்றி அபே, டாடா மேஜிக் போன்ற ஷேர் ஆட்டோக்கள் என மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் முறையான உரிமம் (பெர்மிட்) இன்றி இயக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும், அவற்றின் விதி மீறல் தொடர்கதையாகி வருவதாக அதிகாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்வது, சாலையில் திரும்பும்போது சைகை அல்லது இன்டிகேட்டர் போடாமல் செல்வது போன்ற விதி மீறல்களால் பொதுமக்களும், பிற வாகன ஓட்டிகளும் தொடர் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, மாநகரப் பேருந்துக்காக சாலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களில் இந்த ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றுவதால், சாலையில் அவற்றைத் தாண்டி பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.

குறிப்பாக சென்னை லயோலா கல்லூரி எதிர்ப்புறம் உள்ள பேருந்து நிறுத்தம், சூளைமேடு போக்குவரத்து சிக்னல் பேருந்து நிறுத்தம், அண்ணாநகர் வளைவு பேருந்து நிறுத்தம், பெரம்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், தரமணி, இந்திராநகர், கஸ்தூர்பாய் பறக்கும் ரயில் பேருந்து நிறுத்தங்கள் எனப் பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் இதுபோன்று ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்படுகின்றனர்.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பிற வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

இதைத் தடுக்க போக்குவரத்துப் போலீஸார், மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், ஆட்டோக்களின் விதி மீறல் தொடர்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியது:

பேருந்து நிறுத்தங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவது பேருந்து இயக்கத்துக்கு மிகப் பெரிய இடையூறாக இருந்து வருகிறது. பயணிகளிடம் மட்டுமின்றி, பேருந்து ஓட்டுநர்களிடமிருந்தும் இது தொடர்பாக தொடர் புகார்கள் வருகின்றன.

இதைத் தடுப்பதற்காக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இரும்புத் தடுப்புகள் சொந்தமாகத் தயாரிக்கப்பட்டு, 48 பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அந்தத் தடுப்புக்குள் மாநகரப் பேருந்து மட்டுமே செல்ல வேண்டும். இந்த நடவடிக்கை ஓரளவுக்கு பயனளித்தபோதும், ஒருசில பகுதிகளில் அந்தத் தடுப்புகளுக்குள்ளும் ஷேர் ஆட்டோக்கள் தொடர்ந்து செல்கின்றன.

எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அதிக அளவில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும் பகுதிகளில் சிற்றுந்துகளை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட 100 சிற்றுந்துகள், பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இப்போது, மேலும் 100 சிற்றுந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்தச் சிற்றுந்துகள், பேருந்து இயக்கம் அதிகம் இல்லாத, ஆட்டோக்களின் இயக்கம் அதிகமுள்ள பகுதிகளில் இயக்கப்படும்.

உதாரணமாக லயோலா கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து ஜெமினி நிறுத்தம், டி.எம்.எஸ். நிறுத்தம் போன்ற பகுதிகளுக்கு இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது போல் மேலும் எந்தெந்த இடங்களுக்கு சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என்ற ஆய்வை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையால் ஆட்டோக்களால் ஏற்படும் இடையூறு ஓரளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.