தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தினமும் நூறு டோக்கன்! கெடுபிடி காட்டும் வங்கிகள், அவதிப்படும் வாடிக்கையாளர்கள்

சென்னை மாநகரில் உள்ள பல வங்கிகளில் பணம் எடுப்பதற்கு தினமும் நூறு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்களை வாங்குவதற்கு காலையில் 10 மணிக்கு வர வேண்டும், வரிசையில் நிற்க வேண்டும்.

News image
Updated On :27 டிசம்பர் 2016, 7:18 am

சென்னை மாநகரில் உள்ள பல வங்கிகளில் பணம் எடுப்பதற்கு தினமும் நூறு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்களை வாங்குவதற்கு காலையில் 10 மணிக்கு வர வேண்டும், வரிசையில் நிற்க வேண்டும். ஆனால், இதிலும் ஒரு சங்கடம் உள்ளது. வரிசையில் நிற்பவர்களுக்கு திங்கள்கிழமை டோக்கன் வழங்கப்பட்டால், அவர்களுக்கு செவ்வாய்க்கிழமைதான் பணம் தரப்படும்.
டோக்கன் வழங்கப்பட்டுவிட்டதாலேயே ஒருவருக்கு ரூ.24 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று அர்த்தம் இல்லை. எவ்வளவு அவசர செலவாக இருந்தாலும் ரூ.6 ஆயிரம்தான். அதுவும் வங்கியின் பண இருப்பைப் பொருத்துத்தான். சில நேரங்களில் அது ரூ.4 ஆயிரமோ அல்லது ரூ.2 ஆயிரமாகவோ சுருக்கப்படும்.
மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து, வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் இருந்த சிரமம் தொடர்கிறது. அரசு அறிவித்தபடி பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றால், அங்கு பணம் இருப்பு இல்லை எனக் கூறி, ரூ.2 ஆயிரம் மட்டும் வாங்கிச் செல்லுங்கள் என்று வங்கி அதிகாரிகள் தெரிவிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
25 டோக்கன்கள் யாருக்கு?: காலையில் 10 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டாலும், 25 -ஆம் எண்ணில் இருந்துதான் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 100 டோக்கன்கள் வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், தினமும் 75 முதல் 80 டோக்கன்கள் மட்டுமே தரப்படுகின்றன. அப்போது மீதமுள்ள 25 டோக்கன்கள் எங்கே செல்கின்றன, யாருக்கு கொடுக்கப்படுகின்றன என்று வினா எழுப்புகின்றனர் வங்கி வாசலில் கால் கடுக்க காத்திருக்கும் பொதுமக்கள்.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:
நான் 20 கி.மீ. தொலைவில் இருக்கிறேன். இருப்பினும், மாதச் சம்பள கணக்கு இந்த வங்கிக் கிளையில்தான் உள்ளது. எனவே பணத்தை எடுக்க இங்குதான் வர வேண்டும். இந்தச் சூழ்நிலையில் இந்த வங்கிக்கு மட்டும் பணம் வரவில்லை என்று கூறுவது எங்களுக்கு வியப்பாக உள்ளது. எங்களது கணக்குகளை முடித்து எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை கொடுத்தால் நாங்கள் வெளியூரில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்து கொள்வோம் என்றார் அவர்.

ஏடிஎம் மையங்களில் ஏன் பணமில்லை?

ரூபாய் நோட்டு பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு, ஏடிஎம் இயந்திரங்களில் ரூபாய் 100, 500, 1000 என மூன்று விதமான ரூபாய் நோட்டுகள் அடுக்கப்பட்டு வந்தன. எனவே, பல லட்சம் ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் அதில் வைக்க முடிந்தது. இப்போது 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளுக்கு வைப்பதற்கு வழியில்லை. ஆகவே ரூபாய் நூறு நோட்டுகள் மட்டுமே ஏடிஎம்களில் வைக்கப்படுகிறது.
ரூ.100 நோட்டின் தேவை கணக்கிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. ஆனால், தேவைக்கு ஏற்றபடி எங்களுக்கு ரிசர்வ் வங்கிகளில் இருந்து ரூ.100 நோட்டுகள் கிடைக்கவில்லை. அப்படியே கிடைக்கும் பணத்தில் ரூ.2 லட்சத்தை, ஏடிஎம் மையத்தில் வைத்தால் அது ஒரு மணி நேரத்துக்குள் தீர்ந்து போய்விடுகிறது என்கிறது வங்கிகளின் தரப்பு.

தொழில்நுட்ப பிரச்னை!

புதிதாக புழக்கத்துக்கு வந்திருக்கும் ரூ.2,000 நோட்டை அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் வைக்க முடியவில்லை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மென்பொருள் மேம்படுத்தப்பட்டு ரூ.2,000 நோட்டு வைக்கப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல பிரச்னை. பணத்தினை வைக்கக்கூடிய கேஸட்டின் அளவையும் மாற்ற வேண்டியுள்ளது. அதாவது, இப்போது புழக்கத்துக்கு வந்திருக்கும் ரூ.2,000 நோட்டு, பழைய ரூ.1,000 நோட்டைவிட சிறியதாக இருக்கிறது. எனவே புதிய ரூபாய் ரூ.2,000 நோட்டை வைக்கக்கூடிய அளவுக்குக் கேசட்டை சிறிதாக மாற்ற வேண்டும்.
ஆகவே ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள ஹார்ட்வேர் சிஸ்டத்தையும் மாற்றியாக வேண்டும். புதிய ரூ.500-க்கும் இதே நிலைமைதான். இந்த பிரச்னை சரியாக சில நாள்களாகலாம் என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி பணம் தரவில்லையா?

ரிசர்வ் வங்கி, தமிழ்நாட்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் புதிய நோட்டுகளை வழங்கியது. அதில், 6 ஆயிரம் கோடி ரூபாயை நான்கு தனியார் வங்கிகளுக்கும், மீதமுள்ள 4 ஆயிரம் கோடி ரூபாய் தேசிய வங்கிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டது என வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேலும் தனியாரை காட்டிலும், தேசிய வங்கிகளில்தான் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர். மக்கள் அதிகம் வரும் வங்கிக்கு போதுமான பணத்தை தராததால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தாகவும் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்கள் உள்ளன. 70 ஆயிரம் ஏடிஎம்கள் மட்டுமே புதிய நோட்டு வைக்கும் அளவில் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ரூ.17 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் உள்ளது. இதில் ரூ500, ரூ.1000 நோட்டுகள் 86 சதவீதம் புழக்கத்தில் இருந்தன. மீதியுள்ள 14 சதவீதம் மட்டுமே மற்ற நோட்டுகள் உள்ளன. இந்த 86 சதவீதம் பழைய நோட்டுகள் வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்றாற்போல் புதிய நோட்டுகள் விநியோகம் செய்யாததால் தான் பணத் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே புதிய ரூ.500 நோட்டு போதுமான அளவு புழக்கத்தில் விடவேண்டும். தேசிய வங்கிகளுக்கான பணம் கொடுக்கும் அளவை உயர்த்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.