டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மௌனம் காப்பது ஏனோ...?

எண்ணூர் காமராஜர் துறைமுக கடல் எல்லையில் நடைபெற்ற கப்பல் விபத்து குறித்து சம்பவம் நடைபெற்று சில நாள்களாகியும் விபத்துக்கான காரணம் குறித்து எந்தவித தகவலும் சரியாக வெளிவராதது ஏன் என்ற கேள்வியை சமூக ஆர்வல

News image
Updated On :7 பிப்ரவரி 2017, 9:42 am

முகவை க.சிவக்குமார்

எண்ணூர் காமராஜர் துறைமுக கடல் எல்லையில் நடைபெற்ற கப்பல் விபத்து குறித்து சம்பவம் நடைபெற்று சில நாள்களாகியும் விபத்துக்கான காரணம் குறித்து எந்தவித தகவலும் சரியாக வெளிவராதது ஏன் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
கப்பல்களின் விவரங்கள்: சமையல் எரிவாயுவை இறக்கிவிட்டு துறைமுகத்திலிருந்து வெளியேறிய பி.டபுள்யூ மாபில் எனும் கப்பல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது. 2007-இல் கட்டப்பட்ட இந்தக் கப்பல் மொத்த கொள்ளளவு எடை 47,386 கிலோ. இது 225 மீட்டர் நீளமும், 37 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தக் கப்பல் டீசல் ஏற்றிக் கொண்டு ஜனவரி 28-இல் எண்ணூருக்கு வந்த டான் காஞ்சிபுரம் கப்பல் மீது மோதியது.
டான் காஞ்சிபுரம் கப்பல் மும்பையைச் சேர்ந்த ஆர்யா குழுமத்துக்குச் சொந்தமானது. இந்தக் கப்பலின் மொத்த கொள்ளளவு எடை 29,141 கிலோ. 1996-இல் கட்டப்பட்ட கப்பலின் நீளம் 180 மீட்டர், அகலம் 32 மீட்டர். அளவிலும், ஆயுள், எடை உள்ளிட்டவைகளில் பெரிய கப்பலான மாபில் 20 ஆண்டுகள் பழைமையான டான் காஞ்சிபுரத்தில் வேகமாக மோதியதே இந்தக் கப்பலுக்கு அதிக சேதம் எற்பட்டது தெரியவந்துள்ளது.
காரணத்தைத் தெரிவிப்பதில் தயக்கம் ஏன்? துறைமுகத்தில் உள்ள மாலுமிதான் துறைமுக நுழைவு கால்வாய்க்கு வெளியே சென்று கப்பல்களை அழைத்து வந்திருக்க வேண்டும். இதே விதிமுறைதான் வெளியே செல்லும் கப்பலுக்கும் பொருந்தும்.
இந்த நிலையில், இரு கப்பல்கள் மோதிக்கொண்டபோது இரண்டிலும் காமராஜர் துறைமுக மாலுமிகள் இருந்தார்களா? என்பதுதான் முதல் கேள்வி. அவ்வாறெனில் அவர்களது பெயர்கள் என்ன? அல்லது ஒரே மாலுமிதான் இரண்டு கப்பல்களையும் அடுத்தடுத்து இயக்க முற்பட்டாரா? இதனை விசாரிப்பது என்று பெரிய விஷயமில்லை.
காரணம் உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில் கப்பல்களின் கேப்டன்கள், மாலுமிகள் அனைவரிடம் ஒரு மணி நேரத்தில் விசாரித்து விபத்து குறித்து அறிந்து கொள்ள முடியும். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரு முறை நேரில் சென்று பார்வையிட்டார். அதுவும் சனிக்கிழமை இரண்டு மணி நேரம் டான் காஞ்சிபுரம் கப்பல் கேப்டனிடம் விசாரணை நடத்தினார் அமைச்சர்.
இதன் பிறகும் முதல்கட்டத் தகவல்களைக் கூட அறிவிக்க முடியாத மர்மம் என்ன?
இழப்பீட்டை வழங்க வேண்டியது டான் காஞ்சிபுரம் கப்பலே?: இதற்கு காரணம் கப்பலின் உரிமையாளரான மும்பையைச் சேர்ந்த ஆர்யா குழுமம்தான் நெருக்குதலே காரணம் என்று கூறப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் தொழில் தொடங்கி இரும்பு, கப்பல் துறை உள்ளிட்டவைகளில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களில் பெட்ரோலிய பொருள்களை கப்பல்களில் பல்வேறு துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகளிலும் ஆர்யா குழுமம் ஈடுபட்டு வருகிறது. இதனால் அதிகார பலம் மிக்கவர்களிடம் நெருங்கிய தொடர்பு இந்தக் குழுமத்துக்கு உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆகவே, எண்ணெய்க் கசிவால் பெரிய அளவிலான இழப்பீட்டை இந்நிறுவனம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சட்டங்களின்படி எண்ணெய்க் கசிவை ஏற்படுத்திய கப்பல் நிறுவனம்தான் முழுமையான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இங்கிலாந்து கப்பலான மாபில்தான் ஆர்யா குழுமத்தின் கப்பலான டான் காஞ்சிபுரத்தில் மோதியது, துறைமுக மாலுமிகள் தவறுகளால் இந்த விபத்து ஏற்பட்டு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுவிட்டது என்றெல்லாம் கூறி ஆர்யா குழுமம் தப்பித்து விட முடியாது. இந்த விஷயத்தில் காமராஜர் துறைமுகம்தான் தவறிழைத்தது என சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் புகார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எண்ணெய் படலம் அகற்றும் பணியைப் பார்வையிட்ட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கப்பல் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறப்படும் என உறுதிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையே மாசு; கண்டுகொள்ளாத வாரியம்?

தொழிற்சாலைகளிலிருந்து சிறிய அளவு மாசு வெளியேறினாலே கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எண்ணெய்க் கசிவால் கடற்கரையே மாசடைந்து பல நாள்களாகியும் இதுவரை விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸ் கூட யாருக்கும் அனுப்பாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற துறைமுக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
மாசு ஏற்படுத்திய கப்பலோடு அதில் இருந்த சரக்கையும் சேர்த்து கைப்பற்றியிருக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இதுகுறித்து கப்பல் நிறுவனங்கள், துறைமுக நிர்வாகம் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் முதலில் வழக்குப் பதிவு செய்து சரக்குகளை பிணையம் பிடித்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் கப்பல் நிறுவனங்கள் நெருக்கடியால் இழப்பீடு கொடுக்க இறங்கி வருவார்கள். இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நிலைமை இப்படி இருக்க இழப்பீட்டை எப்படி பெற முடியும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.