திருவொற்றியூரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படுமா?
ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளிக்கிழமை (இன்று) திருவொற்றியூர் வருகிறார். இதையொட்டி திருவொற்றியூர் பகுதியில் பல்வேறு வளர்ச்சித்


ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளிக்கிழமை (இன்று) திருவொற்றியூர் வருகிறார். இதையொட்டி திருவொற்றியூர் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வேகம் பெறும் என்று அப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது திருவொற்றியூருக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கும் பணிகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் இந்த திட்டங்களை முதல்வர் பழனிச்சாமி நிறைவேற்றத் தர வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவொற்றியூர் பகுதியில் முடங்கிக் கிடக்கும் முக்கியத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தக் கோரி பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பினர் முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
பள்ளியில் இயங்கி வரும் அரசு கல்லூரி: 2011-ல் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றவுடன் திருவொற்றியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். திருவொற்றியூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தாற்காலிகமாக 2012 ஆகஸ்டு மாதம் அரசு கல்லூரியை ஜெயலலிதாவே தொடங்கி வைத்தார். மேலும் எர்ணாவூர் மேம்பாலம் அருகே கல்லூரி அமைக்க முடிவெடுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடும் செய்தார். கல்லூரி கட்டடங்கள் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் புதிய கல்லூரிக்கு கட்டடங்கள் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு முதல்வர் தீர்வு கண்டு விரைவில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு வழி செய்ய வேண்டும். புதிய கட்டடங்கள் இல்லாததால் இக்கல்லூரிக்கான கூடுதல் பிரிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் செயல்படும் நீதிமன்றம்: திருவொற்றியூரில் 1969-ம் ஆண்டு முதல் திருவொற்றியூரில் குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றமும், 1996-ல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்கள் கணக்கர் தெருவில் உள்ள பழûமையான கட்டட வளாகத்தில் இயங்கி வந்தன. நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்களை அமைக்க எர்ணாவூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் கனிம வளத்துறையின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் நீதிமன்றக் கட்டடத்தின் மேற்கூரை கடந்த ஜூன் 28-ம் தேதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து காலடிப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றுக்கு நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டு அங்கு தற்போது தாற்காலிகமாக இயங்கி வருகிறது. புதிய நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்வதில் உள்ள பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும்.
வாடகைக் கட்டடத்தில் சார்பதிவாளர்: வடசென்னை பதிவு மாவட்டத்திற்கு உட்பட்டு கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகம் தொடக்கம் முதலே வாடகை கட்டடங்களில்தான் இயங்கி வருகிறது. தற்போது காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் இந்த அலுவலகம் தற்போது ஐந்தாவது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க முதல்வராக ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்தத் திட்டமும் நிலம் ஒதுக்கீடு செய்வதில் உள்ள இழுபறி காரணமாக முடங்கிக் கிடக்கிறது.
வணிக வளாகத்தில் தாலுகா அலுவலகம் : இதேபோல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திருவொற்றியூர் புதிய தாலுகா அலுவலகம் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி எல்லையம்மன் கோயில் பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது. தாலுகா அலுவலகத்துக்கு அனைத்து வசதிகளுடன்கூடிய புதிய கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை நிறைவு பெற்றும் இடம் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக இந்த திட்டமும் முடங்கிக் கிடக்கிறது.
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுநல அமைப்புகளின் அமைப்பாளரும், தொழிலதிபருமான ஜி.வரதராஜன் கூறுகையில், திருவொற்றியூர் பகுதியில் தமிழ்நாடு கனிம வள நிறுவனம்,, சிறு தொழில் துறை, அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான அரசுத் துறை இடங்கள் ஏக்கர் கணக்கில் உள்ளன.
இவற்றை நில உரிமை மாற்றம் செய்வதில் உள்ள இடையூறுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் மட்டுமல்ல, சார்பதிவாளர், தாலுகா, கல்லூரி , சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், உள்ளிட்டவையும் திருவொற்றியூர் மண்டலத்திற்கு எர்ணாவூரில்தான் அமைக்க வேண்டும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், திருவொற்றியூர் வரும் தமிழக முதல்வரிடம் இப்பகுதி பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றார் வரதராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...