தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் தனது அருகாமையிலேயே ஓடியும் இது வரை மணலி ஏரியில் சொட்டுத் தண்ணீர் கூட தேக்கமின்றி புதர்போல் காட்சி அளிக்கிறது.
மழை காலத்துக்கு முன்பே இந்த ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான் இது என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே, மணலி-மாத்தூர் ஏரியைக் காக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
150 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணலி ஏரி: பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள மணலி மாத்தூர் ஏரி அரசு ஆவணங்களின்படி சுமார் 150 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. புழல் ஏரி கால்வாயின் மிக அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது. அண்மையில் கன மழை பெய்தபோது இந்தக் கால்வாயில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி எண்ணூர் வழியாகக் கடலில் கலக்கிறது. காரணம் ஏரியும், இணைப்புக் கால்வாயும் தூர்வாரப்படாததே.
50 ஏக்கர் ஆக்கிரமிப்பு: மாதவரம் பால் பண்ணை நிர்வாகத்திடம் உள்ள தெற்குப் பகுதியிலும் தூர்வாரப்படவில்லை. பழைமையான ஏரியான மாத்தூர் ஏரியின் தென்பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரியவகை பறவையினங்கள் வசிக்கின்றன. ஏரியின் மொத்த பரப்பளவில் சுமார் 50 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் தமிழக அரசே நூற்றுக்கணக்கானோருக்கு ஏரி நிலத்தை வீடுகட்ட ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள பகுதிகளில் வேலிக்காத்தான் மரங்கள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கின்றன.
மழைக் காலத்துக்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஏரியைத் தூர்வார வேண்டும், புழலேரி கால்வாய்-மாத்தூர் ஏரி இடையே உள்ள இணைப்புக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நான்கு புறமும் வலுவான கரைகளை அமைத்து எதிர்காலத்தில் யாரும் ஏரி நிலத்தை ஆக்கிரமிக்காமலிருக்கவும், எவ்விதத்திலும் கழிவுநீர் ஏரியில் கலக்காமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரியும்கூட இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
வட சென்னையின் நிலத்தடி நீராதாரம்: மாதவரம், திருவொற்றியூர், மணலி, மாத்தூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் எங்கு தோண்டினாலும் சில அடி ஆழத்திலேயே சுவையான தண்ணீர் கிடைத்து வந்த நிலையில் கனரகத் தொழிற்சாலைகளின் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், ராட்சத மோட்டார்கள் மூலம் தொடர்ந்து உறிஞ்சப்படும் தண்ணீர் போன்ற பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. ரசாயன ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் கழிவுநீர் போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் இப்பகுதியில் தொடர்ந்து மாசடைந்து வருகிறது.
நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் சில இடங்களில் கடல் நீர் உட்புகுந்து உப்புநீராகவே மாறிவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளது. மாதவரம் பகுதியில் மட்டும்தான் ஓரளவுக்கு குடிநீராகப் பயன்படுத்தும் அளவுக்கு நிலத்தடி நீர்வளம் உள்ளது. அதுவும் இங்குள்ள மாமரத் தோப்புகள், இதர காடுகள் உள்ளிட்டவை இருக்கும்வரைதான் இந்நிலை நீடிக்கும்.
இங்கும் மக்கள் குடியேற்றம் அதிகரிக்கும்போது இப்பகுதியும் திருவொற்றியூர், மணலியைப் போல மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் இருக்கும் நீர்வளத்தைக் காப்பாற்றவும், இழந்த நீர்வளத்தை மீட்கவும் மணலி மாத்தூர் ஏரியை காப்பாற்றுவதே வடசென்னையின் எதிர்கால வாழ்வாதாரமாக உதவிகரமாக இருக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
தற்போதைய கன மழை பாதிப்பிலிருந்து மணலி மண்டலத்தில் பணிளைத் துரிதமாக மேற்கொள்ள அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் தலைமையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநகராட்சி மண்டல அதிகாரி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக மணலி பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புழலேரி உபரி நீர் செல்லும் கால்வாய், மணலி புதுநகர், கொசஸ்தலை ஆறு உள்ளிட்டவற்றை தினமும் பார்வையிடுகின்றனர்.
சென்னை மாநகர எல்லைக்குள் உள்ள முக்கிய ஏரியான இந்த ஏரியை பொதுப்பணித் துறை தன் வசம் வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தால் விரைவில் பலன் கிடைக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
முன் மாதிரியாக விளங்கும் ரெட்டேரி
மாதவரம், புழலுக்கு இடையில் அமைந்துள்ள ரெட்டேரி சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முற்றிலுமாக தூர்வாரி கரையும் அமைக்கப்பட்டது.
2015-இல் கனமழையின்போது நிரம்பிய இந்த ஏரியில் இன்றுவரை தொடர்ந்து தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்வளம் காப்பாற்றப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கும் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. ஏரிகளைப் காப்பாற்றுவது, ஆறுகளில் தடுப்பணைகள் கட்டுவது உள்ளிட்டவை மூலமே தமிழகத்தின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எனவே, முதல்வர் அறிவித்த குடிமராமத்துத் திட்டத்தக்குத் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து ஏரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

வட சென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

