எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வுத் திட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளிலிருந்து சாக்கடைக் கழிவை வெளியேற்றுவதில் அதிகாரிகள் மெத்தனத்துடன் செயல்பட்டு வருவதால் அடிக்கடி சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்தும் ஓடும் அவல நிலை நீடிக்கிறது.
வடசென்னை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் மறுவாழ்வு குடியமர்த்தல் மற்றும் சாலை விரிவாக்கத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு மறுகுடியமர்த்தல் திட்டத்தின் கீழ் எர்ணாவூரில் முதலில் சுமார் 3500 வீடுகள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெளியேற்றப்படும் மக்களுக்கும் இங்கு வீடுகள் கட்டப்பட்டன. தற்போது சுமார் 7,500 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தற்போது சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
பொதுமக்கள் போராட்டம்: இப்பகுதியில் பாதாளச் சாக்கடை இணைப்பு இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் அகற்றப்பட்டன. ஆனால் கழிவுநீரின் அளவு அதிகமாக இருந்ததால் லாரிகள் மூலம் அகற்றுவது சிரமமாக இருந்து வந்தது. இக்கழிவு நீர் தெருக்களில் தேங்கியபோதெல்லாம் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் 18 நகராட்சி வார்டுகளில் அமைக்கப்பட்டு வந்தது. இதற்கென முக்கியக் குழாய்கள் சாலைகளில் பதிக்கப்பட்டன. வீடுகளுக்கும் இணைப்புகள் கொடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆனால் சுத்திகரிப்பு மையங்கள் செயல்பாட்டுக்கு வராததால் கழிவுநீரை பாதாளச் சாக்கடை மூலம் வெளியேற்ற முடியவில்லை.
பணி முடிக்கப்படாத குழாயில் கழிவு நீர் வெளியேற்றம்:
பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் கழிவு நீர் அகற்றல் வாரியம் சார்பில் ராமகிருஷ்ணா நகரிலிருந்து பாரத்நகர், ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் வழியாக பங்கிங்காம் கால்வாய்வரை பிரதானக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதற்கிடையே குடிசை மாற்று வாரியத் தொட்டிகளில் நிரம்பிய கழிவுநீரை மோட்டார் பம்புகள் மூலம், செயல்பாட்டுக்கு வராத இக்குழாய்களில் செலுத்தி எவ்வித சுத்திகரிப்பும் இன்றி பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. இதற்கென ஆங்காங்கே விசைப் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கழிவு நீர் வெளியேற்றப்படும்போது ஏதாவது ஒரு மோட்டார் பம்ப் செயல்படவில்லை, எதிர் அழுத்தம் ஏற்பட்டு ஆள் இறங்கும் குழிகள் வழியாக கழிவு நீர் ஊற்றுப் போல பீச்சியடிக்கிறது. சில நிமிடங்களில் சாலையில் கழிவு நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிறகு இது குறித்து தகவல் அறிந்தவுடன் வெளியேற்றும் மோட்டாரை நிறுத்துகின்றனர். இதனையடுத்து கழிவு நீர் வெளியேற்றப்படுவது நின்றுவிடும். இருப்பினும் கழிவுகளால் அப்பகுதியே அடுத்த சில நாள்களுக்கு துர்நாற்றம் வீசும் அவல நிலை உள்ளது.
இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை காலை பாரத்நகர் பகுதியில் கழிவு நீர் சுமார் 5 ஆளிறங்கும் குழிகள் வழியாக வெளியேறியது. சுமார் அரை மணி நேரம் வெளியேறிய கழிவு நீர் இப்பகுதியை அவலப்படுத்திவிட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
பொதுமக்களும் முகம்சுளித்தபடியே மூக்கைப் பிடித்துக்கொண்டு கடந்து சென்றனர். விசை மோட்டார்கள் இயக்கப்பட்டதையடுத்து கழிவு நீர் வெளியேறுவது நின்றது. ஆனால் ஏற்கனவே வெளியேறிய கழிவு நீர் மஞ்சள் நிறத்தில் தொடர்ந்து தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது.