காவிரி விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம் காரணமாக சென்னை மாநகரில் பெரும்பாலான கடைகள் வியாழக்கிழமை மாலை 5 மணி வரை மூடப்பட்டிருந்தன.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
கடைகள் அடைப்பு: இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சென்னை நகரின் முக்கிய வர்த்தப் பகுதிகளான தி.நகர், பாண்டி பஜார், பாரி முனை ஆகியவற்றிலும், அண்ணா நகர், அம்பத்தூர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு ஆகிய பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான ஜவுளிக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மாநகரில் பெரும்பாலான இடங்களில் பகலில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
கோயம்பேடு சந்தையில் கூட்டம் இல்லை: இந்தப் போராட்டம் காரணமாக குறைந்த அளவிலான சரக்கு வாகனங்களே இயக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும், குறைந்த அளவில் மட்டுமே நுகர்வோர் வந்திருந்தனர். அதேபோல் சில்லரை வியாபாரிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது. இதனால் கோயம்பேட்டு சந்தையில் குறிப்பிட்ட அளவுக்கு வியாழக்கிழமை வியாபாரம் இல்லாமல் போனது என்று சந்தை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
37 ரயில்கள் முன் மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடந்த ரயில் மறியல் போராட்டத்தின்போது 37 ரயில்கள் மறிக்கப்பட்டன. அதனால் அவை 5 முதல் 40 நிமிஷம் வரை தாமதமாக அந்தந்தப் பகுதிகளில் இருந்து புறப்பட்டுச் சென்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், முழு அடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ரயில் மற்றும் பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
ரயில் மறியலில் தமிழகத்தில் 37 ரயில்கள் மறிக்கப்பட்டன. இதன் காரணமாக 40 -க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 நிமிஷம் முதல் 40 நிமிஷம் வரை பயண நேரத்தில் தாமதத்தை சந்திக்க வேண்டியிருந்தது.
ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தால் சென்னைக்கு வந்தடையும் 6 ரயில்களும், சென்னையில் இருந்து புறப்பட்ட 3 ரயில்களும் தாமதமாக சென்றன.
வேலூர் மாவட்டத்தில்: வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டத்தால், கோவை -திருப்பதி எக்ஸ்பிரஸ் உள்பட 4 எக்ஸ்பிரஸ் ரயில்களும், சில மின்சார ரயில்களும் பாதிப்பை சந்தித்தன.
சேலம் கோட்டத்தில்: சேலம் கோட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரயில் மறியல் நடைபெற்றது. மகுடன்சாவடி, மொரப்பூர், காவிரி, எலமனூர், ராசிபுரம், திருப்பூர், லால்குடி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 8 ரயில்கள் போராட்டத்தால் காலதாமத்தை சந்தித்தன.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் -மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் மறிக்கப்பட்டது.
திருநெல்வேலிக்கும் செங்குளத்துக்கும் இடையே தாமிரவருணி பாலம் அருகே திருநெல்வேலி -நாகர்கோவில் பயணிகள் ரயில் மறிக்கப்பட்டது.
திருச்சி கோட்டத்தில்: திருச்சி கோட்டத்தில் மாத்தூர், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம், நெய்வேலி, கடலூர், தஞ்சை ஆகிய ரயில் நிலையங்களில் 16 ரயில்கள் மறிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

பாக்யராஜ் மறைவு.. மகளின் திருமண நாள் படங்களை வெளியிட்ட குஷ்புவுக்கு எதிர்ப்பு!!

ஆமீர் கான் முதல் ஜாக்கி ஷெராஃப் வரை... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பாக்யராஜ் படம்!






