பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

பெண் வழக்குரைஞர் விபத்தில் பலி: கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வழக்குரைஞர் கார் மோதி பலியான வழக்கில், கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து

Updated On :26 டிசம்பர் 2018, 4:11 am IST


இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வழக்குரைஞர் கார் மோதி பலியான வழக்கில், கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வழக்குரைஞர் சுனந்தா பலியானார். இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர்களான மதன், கரண் ஆகிய இருவரையும் பாண்டிபஜார் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் சுனந்தாவின் கணவர் சுரேந்தர் நாயர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள் இருவரும் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், இந்த வழக்கை போலீஸார் உரிய முறையில் விசாரிக்கவில்லை. 
எனவே இந்த வழக்கின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி தாக்கல் மனு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை வரும் ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களை ஜாமீனில் வெளியே விட்டால், வழக்கின் சாட்சிகளை கலைத்து விடுவார்கள், எனவே இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரி மாணவர்கள் இருவருக்கும் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.