ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவின் மாம்பலம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல சோதனையிட வந்த இளைஞர் மாம்பலம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சரணடைந்தார்.
தீபாவின் கணவர் மாதவன் கூறியதன்பேரில், அங்கு வருமான வரித்துறை அதிகாரிபோல வந்து நடித்ததாக சரணடைந்த இளைஞர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான தீபா தனது குடும்பத்துடன் மாம்பலம் சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி தீபா வீட்டுக்கு ஒரு இளைஞர் வந்தார், அவர் தான் வருமான வரித்துறை உதவி ஆணையர் என்றும், அங்கு சோதனை நடத்தப் போவதாகவும் கூறி சோதனையிட முயன்றார்.
மேலும் அவர், தீபாவை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் சோதனை நடத்தப் போவதால் 15 நிமிஷங்களுக்குள் அங்கு வரும்படி தெரிவித்தார்.
இதற்கிடையே தீபா வீட்டுக்கு வந்த அவரது வழக்குரைஞர்கள், அந்த இளைஞரிடம் சில கேள்விகளைக் கேட்டனர். இதில் அவர் பதில் கூறுவதற்கு திணறினார்.
அதேவேளையில் அங்கு ஊடகத்தினரும், போலீஸாரும் திரண்டு வந்ததால், அவர்களை பார்த்து பயந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
இச்சம்பவம் குறித்து தீபாவின் கணவர் மாதவன், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
காவல் நிலையத்தில் சரண்: இந்நிலையில், விழுப்புரம் நாராயணன் நகரைச் சேர்ந்த உடையப்பன் மகன் பிரபாகரன் (31) என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீரென சரணடைந்தார்.
இது தொடர்பாக போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் பிரபாகரன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அத்துடன், இவ்வழக்குத் தொடர்பாக விசாரணை செய்வதற்கு மாதவன் உள்பட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.