பெருங்களத்தூரில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி, பீர்க்கன்கரணை வரை சுமார் 3 கி.மீ தூரம் சாலையின் இருபுறமும் 80 அடிகளாக விரிவுபடுத்தப்பட்டு தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு, மதுரவாயல் புறவழிச்சாலை மற்றும் தாம்பரம் வழியாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், லாரிகள், கன்டெய்னர்கள் உள்ளிட்ட வாகனங்கள் பெருங்களத்தூரைக் கடந்து செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அரசுப் பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஜி.எஸ்.டி. சாலையில் மணிக்கணக்கில் நிறுத்தப்படுகின்றன. இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெருக்கடியில் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.
பயணிகளை ஏற்றிச் செல்ல ஜிஎஸ்டி சாலையில் 3 வரிசையாக நிறுத்தப்படும் பேருந்துகளை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸார் தொடர்ந்து முயற்சித்து வருவதும் வாடிக்கை.
அதேபோல் மாலை 3 மணி முதல் புறகர்பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பேருந்துகள், வெளியூர் மற்றும் மாநகரப் பேருந்துகள், லாரிகள் மூலம் வண்டலூரில் தொடங்கும் போக்குவரத்து நெரிசல் இரவு 11 மணி வரை நீடிக்கிறது.
அதிகாலையில் தென்மாவட்டங்களில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான ஆம்னி மற்றும் அரசுப் பேருந்துகள் பெருங்களத்தூரில் சாரைசாரையாக வந்து நின்று வெளியூர் பயணிகளை இறக்கி விடும் போதும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
இதையடுத்து ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்த சாலையை அகலப்படுத்துமாறு பொதுமக்களும், தன்னார்வலர்களும் பல ஆண்டுகளாக அரசை வலியுறுத்தி வந்தனர்.
பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பால கட்டுமானப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலையை அகலப்படுத்துவதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எளிதில் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாகவும், தாம்பரம் வழியாகவும் செல்ல முடியும்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு அப்பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியது:
தற்போது ரூ.19 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி சாலை அகலப்படுத்தும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாலையின் நடுவில் 4 குறுக்குப் பாலங்களும் அமைக்கும் பணி நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் தற்போது இருக்கும் நான்கு வழிச்சாலை 6 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும். வண்டலூரில் அமைக்கப்படும் பேருந்து நிலையம் மூலம் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








