விதிகளை மீறி பேனர்கள் வைத்தோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னையில் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் பேனர்களை வைத்தோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக காவல்துறையும்,
Updated on
1 min read

சென்னையில் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் பேனர்களை வைத்தோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது' என சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். இந்தப் புகாரை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, 'பசுமைவழிச் சாலையில் இருந்து உயர் நீதிமன்றம் வரை உள்ள சாலைகளில் மட்டும்தான் அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கப்படுவதில்லை. நகரில் உள்ள எல்லா முக்கிய சாலைகளிலும், சாலை ஓரங்களிலும் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக பேனர்கள் வைக்கப்படுகின்றன. விமான நிலையம் செல்லும்போது நானே இதனை பார்த்துள்ளேன். பெரும்பாலான பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படுகின்றன. விதிமுறைகளை மீறி வைக்கப்படும் இதுபோன்ற பேனர்கள் குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்' என கேள்வி எழுப்பினார். 
சென்னை மாநகர் முழுவதும் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றி, அதுதொடர்பான அறிக்கையை காவல் துறையும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 5 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com