எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து பெங்களூருக்கு முதல் சரக்குப் பெட்டக ரயில்
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே முனையத்திலிருந்து சரக்குப் பெட்டக ரயில் முதன்முறையாக செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டது.


எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே முனையத்திலிருந்து சரக்குப் பெட்டக ரயில் முதன்முறையாக செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 3 நாள்களில் 210 சரக்குப் பெட்டகங்கள் பெங்களூருக்கு சரக்கு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 32 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு வருகிறது. மேலும் துறைமுகத்தின் வளர்ச்சிக்கேற்ப பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துறைமுகத்திலிருந்து அத்திப்பட்டு ரயில் நிலையம் வரை சுமார் 7.5 கி.மீ தூரத்துக்கு ரூ.60 கோடி செலவில் ரயில்வே இருப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருப்புப் பாதை நிலக்கரி கையாளப்படும் முனையங்களுடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் காமராஜர் துறைமுகத்தில் உள்ள நிலக்கரி கையாளும் முனையங்களிலிருந்து தற்போது நாள் ஒன்றுக்கு 4, 5 ரயில்களில் மேட்டூர் உள்ளிட்ட அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் அதானி குழுமம் சார்பில் ரூ.1,270 கோடி செலவில் புதிய அதி நவீன சரக்குப் பெட்டக முனையம் அமைக்க 2014-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. முதல் முனையத்தை தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைத்தார்.
இம்முனையம் முதல் கட்டமாக ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது.
இத்திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடையும்போது காமராஜர் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டதாக மாறும். இந்நிலையில் சரக்குப் பெட்டகங்களைக் கையாள்வதற்காக இருவழிகளில் சுமார் 2.5 கி.மீ நீளம் கொண்ட ரயில் பாதையுடன் கூடிய சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் முனையம் கடந்த ஓராண்டுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அதானி முனையத்துக்கு சரக்குப் பெட்டகக் கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த ரயில்வே சிறப்பு முனையமும் செயல்படாமல் இருந்து வந்தது.
முதல் ரயில் புறப்பாடு: இந்நிலையில் உலகின் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான மார்க்ஸ் நிறுவனத்தின் எம்.வி.லியோனியோ என்ற சரக்குப் பெட்டக் கப்பல் கடந்த 20-ஆம் தேதி காமராஜர் துறைமுகத்தின் அதானி முனையத்துக்கு முதன்முறையாக வந்தது. முதல் வருகையின் போது இறக்குமதியான 486 பெட்டகங்களும், ஏற்றுமதிக்கான 287 பெட்டகங்களும் கையாளப்பட்டன. இதையடுத்து சரக்குப் பெட்டகங்களை வெளியே எடுத்துச் செல்லும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இறக்குமதியான பெட்டகங்களை ரயில் மூலம் பெங்களூரு ஒயிட் பீல்டில் உள்ள உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையத்துக்கு எடுத்துச் செல்லும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சரக்குப் பெட்டக முனையத்திலிருந்து முதல் ரயில் இயக்கி வைக்கப்பட்டது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் 210 பெட்டகங்கள் ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
சாலை நெரிசல் குறையும்?: புதிய வசதிகள் குறித்து காமராஜர் துறைமுகப் பொது மேலாளர் (இயக்குதல்) வி.கிருஷ்ணசாமி கூறியது:
தென்னிந்திய அளவில் விரைவாக வளர்ந்து வரும் முன்னணி துறைமுகங்களில் ஒன்றாக காமராஜர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இதற்கேற்ப புதிய முனையங்கள், சாலைகள், ரயில் பாதைகள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை துறைமுக நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதானி சரக்குப் பெட்டக முனையத்துக்கு கப்பல்கள் வருவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டதையடுத்து கடந்த 20 -ஆம் தேதி முதல் சரக்குப் பெட்டகக் கப்பல் இத்துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ச்சியாக கப்பல்கள் வருகை தர உள்ளன. மேலும் இங்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குப் பெட்டகங்களை பெங்களூரு, ஹைதராபாத், தில்லி துக்ளகாபாத் உள்ளிட்ட உள்நாட்டு முனையங்களுக்கு எவ்வித தடையும் இன்றி ரயில்கள் மூலம் விரைவாக எடுத்துச் செல்லும் வகையில் கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளன.
ஏற்கெனவே ரூ. 60 கோடி செலவில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சுமார் ரூ. 75 கோடிசெலவில் இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சரக்குப் பெட்டகங்களை டிரெய்லர் லாரிகளில் சாலை வழியாக எடுத்துச் செல்லும்போது நெரிசல், விபத்து அபாயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் உள்ளன. இந்நிலையில் சரக்குப் பெட்டகங்களை ரயில் மூலம் எடுத்துச் செல்லும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...