பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை இடமாற்றம் செய்வதுதான் தீர்வா?
பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை அதன் வாழ்விடத்தில் இருந்து அவசர அவசரமாக இடமாற்றம் செய்வது தீர்வாகாது என்றும், யானைகள்


பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை அதன் வாழ்விடத்தில் இருந்து அவசர அவசரமாக இடமாற்றம் செய்வது தீர்வாகாது என்றும், யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
உலக அளவில் ஆப்பிரிக்கா அடர்காட்டு யானை, ஆப்பிரிக்கா புதர்காட்டு யானை, ஆசிய யானை ஆகிய மூன்று இனங்கள் உள்ளன. இந்திய அளவில் அண்மையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 2,761 யானைகள் உள்பட இந்திய அளவில் 27,312 ஆசிய யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கோயம்புத்தூர், தருமபுரி, சத்தியமங்கலம், திண்டுக்கல் ஆகிய வன மண்டலங்களில் யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன.
இதில், கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம் சுற்றுவட்டாரப் பகுதியும், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியும் அதிக அளவிலான யானை-மனித மோதல்கள் நடக்கும் இடங்களாக உள்ளன. கடந்த 2013-17 வரையிலான 4 ஆண்டுகளில் யானைகள் தாக்குதலில் இந்திய அளவில் 1,400 பேரும், மின்சாரம், மனிதர்களின் தாக்குதல் காரணமாக 50-க்கும் மேற்பட்ட யானைகளும் இறந்துள்ளன. இந்நிலையில், மோதல், பயிர்ச்சேதம் காரணமாக யானைகள் அதன் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தமிழகத்தில் தொடருகின்றன.
கோவை மாவட்டம் சின்னத்தடாகம், பெரிய தடாகம் உள்ளிட்ட கிராமங்களில் பயிர்களைச் சேதப்படுத்தி வந்த விநாயகன்', சின்னத்தம்பி' யானைகள் பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டன.
ரேடியோ காலர் பொருத்தியும் பயனில்லை: இடமாற்றம் செய்யப்பட்ட இரு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய அதிநவீன ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. வரகளியாறு வனப் பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி இரண்டே நாளில் அங்கிருந்து கீழே இறங்கி அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அதிகாலை நுழைந்தது. வனத்துக்குள் விடப்பட்ட நிமிடத்தில் இருந்து ரேடியோ காலர் மூலம் முறையாக கண்காணித்திருந்தால், சின்னத்தம்பி யானை அங்கலக்குறிச்சிக்குள் நுழையும் முன்னரே தடுத்து நிறுத்தி மீண்டும் வனத்துக்குள் அனுப்பி இருக்க முடியும்.
ஆனால், முறையான கண்காணிப்பு, தகவல் தொடர்பு இல்லாதது, அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டது போன்றவற்றால் சின்னத்தம்பி தனது வாழ்விடத்தை இழந்து தற்போது, உடுமலை அருகே அகதியைப் போல் சுற்றித் திரிகிறது. இதுபோன்று ஆரோக்கியமான யானைகளை அதன் வாழ்விடத்தில் இருந்து இடமாற்றம் செய்யாமல் அவை வனத்தை விட்டு வெளியே வராமல் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இடமாற்றம் தீர்வல்ல: இதுகுறித்து யானைகள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், கர்நாடக மாநிலம், ஹாஸன் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆளூர் வனப் பகுதியில் யானைகள்-மனித மோதல் காரணமாக அங்கிருந்த 25 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.
ஆனால், அடுத்த சில மாதங்களிலே மற்றொரு யானைக் கூட்டம் ஆளூர் வனப் பகுதியை ஆக்கிரமித்து விட்டன. இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன.
சின்னத்தம்பி போன்ற நன்கு வளர்ச்சி அடைந்த ஆண் யானைகளை இடமாற்றம் செய்வதும், அதை வளர்ப்பு அல்லது கும்கி யானையாக மாற்றுவது மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாகாது. இதைத் தவிர்த்து, அந்த யானை விளைநிலங்களுக்குள் புகாமல் இருக்க அதன் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, ஒரு பகுதியில் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைப்பது, சூரிய மின்சார வேலிகளை முறையாகப் பராமரிப்பது, யானைகளின் வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவது, யானைகள் நடமாட்டத்தை அதிநவீன கருவிகள் மூலம் கண்காணிப்பது ஆகிய உக்திகளைப் பயன்படுத்தலாம்' என்றனர்.
வனப் பகுதிக்குள் விரட்டவே முயற்சி: இதுகுறித்து முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மல்லேசய்யா கூறுகையில், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் முடிவு இல்லை.
முடிந்த வரை அதை வனப் பகுதிக்குள் விரட்டவே முயற்சிகள் எடுத்து வருகிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...