எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

கவனியுங்கள்!

கவனியுங்கள்!

News image
Updated On :15 ஜனவரி 2019, 4:16 am IST



இரண்டு தந்தையர் (நாடகங்கள்)- சுந்தர் சருக்கை;
தமிழில்: சீனிவாச ராமாநுஜம்; ரூ.200; 
பரிசல் புத்தக நிலையம், சென்னை-5.
ஐன்ஸ்டைன், இராமானுஜன், காந்தி ஆகிய மூவரும் முறையே அறிவியலில், கணிதத்தில், சத்தியவேட்கையில் பரிசோதனை செய்து பார்த்தவர்கள். அறிவியல், கணிதம், வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்ற வெவ்வேறு அறிவுத்துறைகள் ஒன்று சேரும் அதிசயம் வெகு அரிதாகத்தான் நிகழும். அது இப்போது இந்த நாடகங்களில் நிகழ்ந்திருக்கிறது. இதுபோன்ற நூல்கள் வரும்போதுதான் தமிழின் ஆழ அகலங்கள் விரிவடையும். அதைத் தன் மொழிபெயர்ப்பின் மூலம் சீனிவாச ராமாநுஜம் செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், தமிழில்தான் இந்த நாடகங்கள் முதன்முதலில் பிரசுரமாகின்றன. புதிய திசையை நோக்கி பார்வையைத் திருப்பும் படைப்பு.

குரு - சிஷ்யன் அறிவுரைக் கதைகள் - மு.அப்பாஸ் மந்திரி; ரூ.145; 
விஜயா பதிப்பகம், சென்னை-5.
ஆசிரியர் - மாணாக்கர் உறவுமுறை புனிதத்துவத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. 100 கதைகளில் குரு- சிஷ்யர்களிடையிலான மரியாதையையும், அன்பையும், கடமை உணர்வுகளையும், செயல்பாடுகளையும் மிக ஆழமாகவே பதிவு செய்கிறது. இன்றைய இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்காமல், நல்லதை விதைத்து அவர்களை நல்வழிப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் நிச்சயம் திருத்திக் கொள்வார். அதே போன்று நூலை வாசிக்கும் மாணவர் ஒவ்வொருவரும் தம்முடைய குறைகளைக் களைந்து கொள்வார்கள்.


கலைந்த கனவுகள் - இரா.விச்சலன்; ரூ.180; 
பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14.
கிராமங்களில் விவசாயம் நலிவுற்றுப் போனதால் நகரங்களில் உள்ள பஞ்சாலைகளில் கொத்தடிமைகளாகப் பெண்கள் பணிபுரிய நேர்கிறது. 
அங்கே பெண்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் நிலை ஒருபுறம் இருக்க, பெண் என்பதால் பல தொல்லைகளை அனுபவிக்க நேர்கிறது. 
பண்பாட்டு நாசமும் நிகழ்கிறது. நூற்பாலைகளில் வேலை செய்யும் இளம் பெண்கள் சிலரின் வாழ்க்கை நாசமாவதோடு, அவர்கள் மனநலமும் பாதிக்கப்படுகிறது. பலவிதமான உடல் நோய்களுக்கும் உள்ளாகிறார்கள். 
நூற்பாலைகளில் வேலை செய்யும் பெண்களின் அவலநிலையை மிகவும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது இந்நாவல்.

செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும் சென்னைக் குடிநீருக்கான தீர்வும் - கி.நடராசன்; ரூ.60; 
பூவுலகின் நண்பர்கள், சென்னை-26.
சென்னைப் பெருநகரத்துக்கு குடிநீர் தருபவை ஏரிகளே. சென்னைக்கு சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் வரலாறு, அதன் இன்றைய நிலை பற்றி விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. 
2015 டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்தது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் இதனால் வெள்ளம் சூழ்ந்தது. செம்பரம்பாக்கம் ஏரி எல்லாராலும் அப்போது பேசப்பட்டது. இந்நூல் சென்னைப் பெருநகர, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்கான மாற்றுத் தீர்வுகளையும் முன் வைக்கிறது. ஏரிகளைப் பாதுகாப்பதன் தேவையையும், அதற்கான வழிகளையும் சுட்டிக்காட்டுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.