இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பாதைகளில் பணிகள் நிறைவடைந்து, ரயில்கள் இயக்கம் தொடங்கியபிறகு தினந்தோறும் 19.2 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. 45 கி.மீ. தொலைவிலான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஹவண்ணாரப்பேட்டை-விமானநிலையம் இடையே முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை இடையே இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் தினசரி மொத்தம் 95 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.
இதற்கிடையில், இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
மாதவரம்-சிறுசேரி சிப்காட் (45.8 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூர் (47 கி.மீ.) கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி (26.1) ஆகிய பாதைகள் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிகளை முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தட பாதைகளில் 4 முதல் 10 நிமிஷங்கள் இடைவெளியில் தினசரி 138 ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
இதில், தினமும் 19.2 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-ஆவது கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பாதையில் 2035-ஆம் ஆண்டில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 32.6 லட்சமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியது: மாதவரம்-சிறுசேரி 2-ஆவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் (முதல் காலாண்டு) தொடங்கவுள்ளது. 2025-ஆம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டு பயணிகள் சேவை தொடங்கப்படும்.
அதில் 138 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தினமும் 19.2 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். முதல் கட்ட மெட்ரோ ரயில் 45 கிலோ மீட்டர் வழித்தட பாதையில் தினமும் 7.76 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








