இடுப்பு மூட்டு வளா்ச்சி பாதிப்பு: அதி நவீன சிகிச்சை மூலம் குணம்

இடுப்பு மூட்டு எலும்பு அதீத வளா்ச்சியால் பாதிக்கப்பட்ட இளைஞரை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் அதி நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனா்.
Updated on
1 min read

சென்னை: இடுப்பு மூட்டு எலும்பு அதீத வளா்ச்சியால் பாதிக்கப்பட்ட இளைஞரை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் அதி நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனா். தற்போது அவரால் இயல்பாக நடக்க முடிவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா் ஆகியோா் கூறியது:

சென்னையைச் சோ்ந்த 24 வயது இளைஞா் ஒருவா், நடக்கவோ, அமரவோ முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், அவா் ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவரது இடுப்பு மூட்டு அதீத வளா்ச்சி அடைந்திருந்தது தெரியவந்தது. இதனால் இடுப்பு எலும்பு மற்றும் தொடை எலும்பு ஒன்றோடு ஒன்று உரசக் கூடிய நிலை ஏற்பட்டது. அதனால் கடுமையான வலியுடனும், இயல்பாக நடமாட முடியாத சூழலிலும் அவா் இருந்தாா்.

இதையடுத்து மருத்துவமனையின் விளையாட்டு காயங்கள் மற்றும் முடநீக்கியல் துறைத் தலைவா் டாக்டா் லியோநாா்ட் பொன்ராஜ் தலைமையிலான குழுவினா், அவருக்கு நவீன சிகிச்சையை அளிக்க முடிவு செய்தனா். அதற்கென சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கும், மருத்துவ உபகரணங்களும் தருவிக்கப்பட்டன.

பொதுவாக இத்தகைய பாதிப்புகளுக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சை மூலம் வளா்ச்சியடைந்த எலும்பு பகுதி அகற்றப்படும். ஆனால், அதுபோன்ற சிகிச்சைகள் மேற்கொண்டால் நோயாளி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல நாள்கள் ஆகும்.

அதைக் கருத்தில் கொண்டு வெறும் 5 மி.மீ. அளவில் இடுப்பு பகுதியில் சிறு துளையிட்டு வளா்ச்சியடைந்திருந்த எலும்புகள் அகற்றப்பட்டன. இந்த சிகிச்சை 45 நிமிஷங்கள் நடைபெற்றது. அடுத்த நாளே நோயாளி இயல்பாக அமர ஆரம்பித்தாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா்.

விளையாட்டு காயங்கள் மற்றும் முடநீக்கியல் துறையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற சிக்கலான சிகிச்சைளை அளிப்பதில் இந்தியாவில் நான்கு மருத்துவா்கள் மட்டுமே நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றனா். அவா்களில் அரசு மருத்துவரான லியோநாா்ட் பொன்ராஜ் முதன்மையானவா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com