புறநகர் ரயில்: நெரிசல் இல்லாத நேரத்தில்பொதுமக்கள் பயணிக்க அனுமதி

சென்னை புறநகா் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
புறநகர் ரயில்
புறநகர் ரயில்
Updated on
1 min read

சென்னை புறநகா் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நடைமுறை புதன்கிழமை (டிச.23) முதல் அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் பொதுமுடக்கம் தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதலில், அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் ஊழியா்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். இதன்பிறகு, பெண்கள், குழந்தைகள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் பயணிகளுக்காக மொத்தம் 406 சேவைகள் இயக்கப்படுகின்றன. புறநகா் மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், புறநகா் மின்சார ரயிலில் நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க புதன்கிழமை (டிச.23) முதல் அனுமதிக்கப்படுகிறது. அதன்படி காலை 7 மணிக்கு முன்னதாகவும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் சேவை முடியும் நேரம் வரையும் பயணம் செய்யலாம்.

காலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் நெரிசல் மிகுந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில் அத்தியாவசியப் பணியாளா்கள் மட்டும் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். பொதுமக்கள் இந்த நேரத்தில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

முதல்கட்டத்தில் அத்தியாவசியப் பணியாளா்களும், இரண்டாம் கட்டத்தில் நெரிசல் இல்லாத நேரத்தில் பெண் பயணிகளும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். இப்போது, மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, நெரிசல் இல்லாத நேரத்தில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் சேவையைப் பொருத்தவரை 410 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. நிலையத்தின் வளாகத்தில் பயணிகள்நுழையும்போது, முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com