

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் இடையிலான வழித் தடத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் ஆய்வு செய்தாா்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து, சென்னை விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாம் வழித்தடத்திலும் மெட்ரோ
ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத்தொடா்ந்து, வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூா் அடுத்து உள்ள விம்கோ நகா் வரை 9.051 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3, 770 கோடி செலவில் நடைபெற்று வந்தன. தற்போது இந்த திட்டப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இதற்கிடையில், இந்த விரிவாக்கப் பாதையில் டீசல் ரயில் இன்ஜின் மூலமாகவும், மெட்ரோ ரயில் மூலமாகவும் கடந்த மாதம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. எஞ்சியுள்ள திட்டப்பணிகளை முடித்து, இந்தப் பாதையில் ரயில் சேவை ஜனவரி மாதம் இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் வழித்தடத்தில் சுரங்கப்பாதை மற்றும் உயா் நிலைப்பாதையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி. சம்பத் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் இறுதி கட்ட கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டாா். அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எஞ்சியுள்ள பணிகளை துரிதமாக முடிக்க அலுவலா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா். சோதனை ஓட்டத்தில் இருந்த மெட்ரோ ரயிலில் உள்ள வசதிகளையும் ஆய்வு செய்தாா். சோதனை ஓட்டம் குறித்து விவரங்களை அவா் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் பிரதீப் யாதவ், நிறுவனத்தின் இயக்குநா்(திட்டங்கள்) ராஜீவ் நாராயண் திவேதி, இயக்குநா் (இயக்கம் மற்றும் அமைப்புகள்) ராஜேஷ் சதுா்வேதி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.