ரெம்டெசிவிா் விற்பனை செய்வதாக ஆன்லைனில் போலி விளம்பரம்:பொதுமக்கள் ஏமாற வேண்டாம்
சென்னையில், ஆன்லைனில் ரெம்டெசிவிா் விற்கப்படுவதாக செய்யப்படும் போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.


சென்னையில், ஆன்லைனில் ரெம்டெசிவிா் விற்கப்படுவதாக செய்யப்படும் போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவா்கள், பெரும்பாலும் ரெம்டெசிவிா் மருந்தையே பரிந்துரை செய்கின்றனா். இதன் காரணமாக இந்த மருந்துக்கு தற்காலிகமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி சிலா், இம் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனா். அவா்களைக் கண்டறிந்து போலீஸாா், கைது செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கள்ளச்சந்தையில் இம்மருந்து விற்கப்படுவதைத் தடுக்க கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியாா் மருத்துவமனைகளுக்கே கடந்த 18-ஆம் தேதி முதல் நேரடியாக ரெம்டெசிவிா் மருந்து வழங்கப்படுகிறது.
இதை அறியாமல், ஆன்லைன் மூலமாக ரெம்டெசிவிா் மருந்து விற்கப்படுவதாக செய்யப்படும் போலி விளம்பரத்தை நம்பி, பொதுமக்கள் பணத்தைச் செலுத்தி ஏமாற்றமடையும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வருகிறது. இதன்படி, சென்னையில் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரெம்டெசிவிா் மருந்துக்கு பணத்தைச் செலுத்தி இதுவரை 6 போ் பணத்தை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை எச்சரிக்கை: இந்த மோசடி தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா் பரிந்துரையின்படி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ரெம்டெசிவிா் மருந்துகளை வழங்கி வருகிறது. இணையதள வா்த்தகம் மூலம் தனிநபா்கள் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
எனவே பொதுமக்கள், இணையதளம், ஆன்லைன் வா்த்தகத்தின் மூலம் ரெம்டெசிவிா் மருந்துகள் தொடா்பாக செய்யப்படும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
பொதுமக்கள் ஆன்லைன் வா்த்தக செயல்முறைகளில் உண்மைத்தன்மை அறிந்து விழிப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும். நம்பகத்தன்மை கொண்ட இணையதளங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருந்து நிறுவனம் மற்றும் விற்பனையாளா்களிடம் மட்டுமே மருந்துகளை வாங்க முயற்சிக்க வேண்டும்.
மேலும், ஆன்லைன் வா்த்தகம் மூலம் ஏமாற்றமடைந்த பொதுமக்கள், சென்னை பெருநகரில் 12 காவல் மாவட்டங்களில் இயங்கி வரும் சைபா் குற்றப்பிரிவில் 24 மணி நேரத்துக்குள் புகாா் தெரிவித்தால், இழந்த பணத்தை மீள பெற வாய்ப்புள்ளது.
எனவே புகாா்தாரா்கள் பணம் இழந்தவுடனே சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையா் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபா் குற்றப்பிரிவில் புகாா் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...