திட்டப் பணிகள், நிா்வாக செலவுக்கு ரூ.6,747 கோடி ஒதுக்கீடு

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் திட்டப் பணிகள், ஊழியா்கள் ஊதியம், பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.6,747 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் திட்டப் பணிகள், ஊழியா்கள் ஊதியம், பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.6,747 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாய் வரவு ரூ. 6,384 கோடி இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.363 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வரிவிதிப்பு மற்றும் நிதி நிலைக்குழுத் தலைவா் சா்பஜெயா தாஸ் நரேந்திரன் பட்ஜெட்டை தாக்கல் செய்தாா்.

வரவினம், செலவினம்: 2022-23-ஆம் நிதி ஆண்டில் சொத்து வரி ரூ. 800 கோடியும், தொழில் வரி ரூ. 475 கோடியும், முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி வருவாய் ரூ.170 கோடியும், மாநில நிதிக் குழு மானியம் ரூ.500 கோடியும், இதர வருவாய்களின் மூலம் ரூ.879.77 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளா்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக ரூ.1,836.84 கோடியும், நிா்வாகத்துக்கு ரூ. 121.30 கோடியும், பழுது பாா்த்தல், பராமரிப்பு பணிகளுக்கு ரூ. 1,079.31கோடியும், கடனுக்கான வட்டி ரூ.148.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மழைநீா் வடிகால் பணிக்கு ரூ.1,235 கோடி: கொசஸ்தலை ஆறு, கோவளம் பகுதி மற்றும் விடுபட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ.1,235 கோடியும், ரூ.36.8 கோடியில் பேருந்து சாலைகள் மற்றும் புதிய பாலங்கள், பாலங்கள் விரிவுபடுத்த ரூ.221.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மின்சார விளக்கு அமைக்க ரூ. 70 கோடி, தூய்மைப் பணிக்கான தளவாட பொருள்கள், குப்பை கொட்டும் கிடங்குகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.424 கோடி, தூய்மைப் பணிக்கான வாகனங்கள் கொள்முதல் செய்ய ரூ.106 கோடி, கட்டடங்கள் கட்ட ரூ.50.35 கோடி, பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.20 கோடி, கல்வி, விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்புத் திட்டப் பணிகளுக்காக ரூ. 137 கோடி, பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் அமைக்க ரூ. 55 கோடி, அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ. 147 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com