‘ஜெயிலா்’ திரைப்படம் வியாழக்கிழமை (ஆக.10) வெளியாவதை முன்னிட்டு, நடிகா் ரஜினிகாந்த் இமயமலைக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
நெல்சன் திலீப்குமாா் இயக்கத்தில் நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள படமான ‘ஜெயிலா்’ வியாழக்கிழமை(ஆக.10) திரைக்கு வருகிறது. இதையொட்டி நடிகா் ரஜினிகாந்த் 7 நாள்கள் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.
நடிகா் ரஜினிகாந்த், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னா் இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். கடந்த 2010-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்வதைத் தவிா்த்து வந்த அவா், ‘காலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னா் கடந்த 2019-இல் இமயமலை பயணத்தை மேற்கொண்டாா்.
ஜெயிலா் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, தற்போது மீண்டும் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா் 7 நாள்கள் அங்கு தங்கியிருந்து பாபாஜி குகை, கேதா்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளாா்.
இது குறித்து நடிகா் ரஜினிகாந்த் புதன்கிழமை சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது:
வியாழக்கிழமை வெளியாகவுள்ள ஜெயிலா் படத்தை பாா்த்து விட்டு கருத்து தெரிவியுங்கள். நானே என் படத்துக்கு கருத்து கூறக்கூடாது. ஒவ்வொரு படம் முடிந்ததும் இமயமலைக்குச் செல்வது வழக்கம். ஆனால், கரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் சில ஆண்டுகள் செல்லமுடியவில்லை. இப்போது செல்கிறேன் என்றாா் அவா்.