சென்னையில் ஏப்.17 முதல் 19 வரை மதுபானக் கடைகள் மூடப்படும்

சென்னையில் ஏப்.17 முதல் 19 வரை மதுபானக் கடைகள் மூடப்படும்

சென்னை: மக்களைவை தேர்தலை முன்னிட்டு, ஏப்.17 முதல் 19-ஆம் தேதி வரையும், ஜூன் 4-ஆம் தேதியும் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட மதுபானக் கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் ஏப்.17-ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 19-ஆம் தேதி இரவு 12 மணி வரையும், மற்றும் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ஆம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகளும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அது சார்ந்த பார்களையும் கட்டாயம் மூட வேண்டும்.

இந்த நாள்களில் வேறு எந்த விதத்திலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்யும் கடைகள் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் மதுபானம் விற்பனை விதிகள் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

19-இல் கோயம்பேடு காய்கறி, பழ சந்தைகள் செயல்படாது:

மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஏப்.19-ஆம் தேதி கோயம்பேடு காய்கறி, பழ சந்தைகள் செயல்படாது என கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரி நல சங்கத்தின் பொதுச் செயலர் எஸ்.எஸ்.முத்துகுமார் மற்றும் கோயம்பேடு பழக்கடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் நா.ரமேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோயம்பேடு வணிக வளாகத்தில் ஆயிரக்கண வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்களில் பெரும்பாலானவர்கள் பிற மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து தங்கியிருந்து பயணியாற்றி வருவதால், அனைவரும் ஏப்.19-ஆம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவில் முழுவதுமாக வாக்களிக்க வசதியாக ஒரு நாள் மட்டும் கோயம்பேடு சந்தை செயல்படாது.

அதன்படி ஏப்.18-ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஏப்.19-ஆம் தேதி இரவு 10 மணிவரை காய்கறி மற்றும் பழ சந்தை முற்றிலும் இயங்காது. ஏப்.19-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் வழக்கம்போல காய்கறிகள் விற்பனை தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோயம்பேடு மலர் சந்தை மட்டும் வழக்கம்போல் இயங்கும் என மலர் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com