மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் (97) மறைவு

மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் (97) மறைவு

சென்னை: மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (97) சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.9) காலமானார்.

இன்று இறுதிச் சடங்கு: மறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு மனைவி ராஜம்மாள், மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். ஆர்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்குகள் நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் புதன்கிழமை (ஏப்.10) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளன.

பன்முக ஆளுமையாக விளங்கியவர்: சென்னை, தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உடல் நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு செவ்வாய்க்கிழமை காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உயர் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டபோதிலும் ஆர்.எம்.வீரப்பனின் உயிர் பிரிந்தது.

அரசியல், கலை, இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் அழியாத் தடம் பதித்து பன்முக ஆளுமையாக விளங்கிய ஆர்.எம்.வீரப்பனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம்...: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அருகே உள்ள வல்லத்திராக் கோட்டையில் கடந்த 1926-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன். தனது இளம் வயதிலேயே காரைக்குடியில் பெரியார் ஈ.வெ.ரா. அறிமுகம் கிடைக்கப் பெற்றதால், திராவிடக் கொள்கைகளால் அவர் ஈர்க்கப்பட்டார்.

அண்ணா மூலம் எம்ஜிஆருடன்...: அதே காலகட்டத்தில் கே.ஆர்.ராமசாமியின் நாடகக் குழுவில் கண்காணிப்பாளராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். அதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு அண்ணா மூலம் எம்ஜிஆரின் அறிமுகம் கிடைத்தது. எம்ஜிஆரின் நாடகக் குழுவுக்கு மேலாளராகவும், அதைத் தொடர்ந்து அவரது திரைப்பட நிறுவனத்துக்கு (எம்ஜிஆர் பிக்சர்ஸ்) துணை இயக்குநராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.

அதன் பின்னர், சத்யா மூவீஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆரை நாயகனாகக் கொண்டு பல படங்களைத் தயாரித்தார். தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்ஷாக்காரன், காக்கி சட்டை, பாட்ஷா என மொத்தம் 24 படங்களை அவர் தயாரித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா...:

திரைத் துறை பணிகளுக்கு நடுவே தீவிர அரசியலிலும் ஈடுபட்ட ஆர்.எம்.வீரப்பன், திமுகவிலிருந்து எம்ஜிஆர் விலகிய பிறகு அதிமுக என்ற தனிப் பெரும் கட்சி உருவாக காரணமாக அமைந்தவர்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது ஜானகி அணிக்கு பக்கபலமாக இருந்த ஆர்.எம்.வீ., அதன் பின்னர் ஜெயலலிதாவசம் கட்சி வந்தபோது அதிமுகவின் இணை பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும், ஜானகியின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கல்வி மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராகவும் ஆர்.எம்.வீரப்பன் இருந்தார்.

இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், மூன்று முறை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்த ஆர்.எம்.வீரப்பன், அதிமுகவிலிருந்து விலகி எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியைத் தோற்றுவித்தார்.

இலக்கிய ஆளுமை: ஒரு புறம் கலைத் துறை, மறுபுறம் அரசியல் எனத் தீவிரமாக இயங்கி வந்தாலும், அதற்கு நடுவே இலக்கியப் பணிகளிலும் தன்னை ஈடுபாட்டுடன் இணைத்துக் கொண்டார்.கம்பன் கழகம், ஆழ்வார்கள் ஆய்வு மையம் ஆகியவற்றை தோற்றுவித்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்த பெருமை அவருக்கு உண்டு.

முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த

ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com