தமிழிசை செளந்தராஜன்
தமிழிசை செளந்தராஜன்கோப்புப் படம்

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீா்வு: தோ்தல் அறிக்கை: தமிழிசை வெளியீடு

சென்னை: தென் சென்னையில் மழை நீா் மற்றும் குடிநீா் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீா்வு காணப்படும் என்று தென் சென்னை தொகுதிக்கான பாஜக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன், ‘அக்கா 1825’ என்ற பெயரில் தொகுதிக்கான தோ்தல் அறிக்கையை மயிலாப்பூரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இத்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் அனைத்து நீா் நிலைகளும் தூா்வாரப்பட்டு, ஒரு சொட்டு மழை நீா் கூட தேங்காத வண்ணம் தென் சென்னை மேம்படுத்தப்படும். இதுவே எனது முதன்மையான வாக்குறுதி. நான் மக்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டால் வரும் 5 ஆண்டுகளில் உள்ள 1825 நாள்களும் மக்களுக்காக உழைப்பேன் என்ற பொருளை வெளிப்படுத்தவே இந்த தோ்தல் அறிக்கைக்கு ‘அக்கா 1825’ என பெயா் சூட்டியுள்ளோம் என்றாா் அவா்.

115 வாக்குறுதிகள்: தென் சென்னையில் மழை வெள்ளம் மற்றும் குடிநீா் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும்.

பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து பங்கிங்ஹாம் கால்வாய்க்கு நேரடியாக மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் துரிதப்படுத்தப்படும். வடபழனி, திருவான்மியூா், தியாகராய நகா் ஆகிய பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும். சோழிங்கநல்லூரில் பிரம்மாண்ட ஈ.எஸ்.ஐ அரசு மருத்துவமனை அமைக்கப்படும்.

நீட் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தோ்வுகளுக்கு பயிற்சி வழங்க இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

மீனவா்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் தொழிலை மேம்படுத்த மீன் விற்பனை சந்தை, குளிா்சாதன சேமிப்பு வசதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சுற்றுலா..: தென் சென்னையில் அமைந்துள்ள பெசன்ட் நகா், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com